கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை நிறமாக மாறி உள்ளதால், அதனை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த பகுதியில், சில விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் நிறம் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. நிலத்தடி நீர் நிறம் மாறி இருப்பதால் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்புக்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 




இது குறித்து கணியூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 10 ஆண்டுகளாக தனியார் தொழிற்சாலை கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, பச்சை நிறமாக மாறிவிட்டது. கிணறு, போர்வேல் மூலம் வரும் தண்ணீர் பச்சை நிறமாகவே வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பயிர்கள் கருகி விடுகிறது.




நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் பல்வேறு ரசாயன வேதிப் பொருட்களின் தன்மை இருப்பதும்,  நீரை பயன்படுத்த உகந்தது அல்ல என்பதும் தெரியவந்தது. அந்த தண்ணீரை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் கிணறுகள் பச்சை நிறமாக மாறுவது அதிகரித்து வருகிறது. பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.




இது குறித்து கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி கூறுகையில், “கணியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீரின் தன்மை மாறியுள்ளதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து கிராம ஊராட்சிக்கு சொந்தமான ஆள்துளை கிணறுகளில் நீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண