விவசாய விளை நிலங்கள் வழியாக தமிழக அரசின் மின் வாரியத்தின் மூலமாக அரசூர் முதல் ஈங்கூர் வரை 230 கே.வி. மின் வழித் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கருமத்தம்பட்டி, எலச்சி பாளையம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட செம்மாண்டம்பாளையம், ராக்கியாபாளையம், செட்டிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், செங்கப்பள்ளி,  ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வழியே உயர் மின் கோபுரமும், மின்கம்பியும் அமைக்கப்படுகிறது. இதனால், இந்நிலத்தில் பயிர் செய்துள்ள தென்னை, சோளம், பருத்தி, காய்கறிப் பயிர்கள், வேம்பு உள்ளிட்ட வளர்ந்த மரங்கள் சேதமடைவதாகவும், நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி உயர் மின் கோபுரம் மாற்றுப் பாதையில் அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 


இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் ஒரு இழப்பீடும், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இழப்பீடும் கணக்கிடப்படுகிறது என புகார் எழுந்துள்ளது. இதனால் கோவை  மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எலச்சிபாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் இன்று துவங்கியதை  கண்டித்து 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், எலச்சிபாளையத்தில் உள்ள உயரழுத்த மின் கோபுரம்  மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய்த் துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய இழப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு உயர் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர்.


இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”தற்போது இந்த பகுதியில் நில மதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மிகச் சொற்பமான தொகையை இழப்பீடாக மின்சார வாரிய அதிகாரிகள் தருகின்றனர். நிலம் வழங்கிய எங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச உள்ளோம். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தனர். உயர் மின் கோபுரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண