பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை, வருகின்ற 16-ஆம் தேதி சென்னையில் அக்கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பதவி ஏற்க இருக்கிறார். இதற்காக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சாலை மார்க்கமாக பேரணியாக செல்கிறார். இப்பேரணி கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று துவங்கியது. இதற்கு முன்பாக கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு நடத்தினார்.
பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வரும் 16-ஆம் தேதி பிற்பகல் சென்னையில் பொறுப்பேற்க இருக்கிறேன். சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க இருக்கின்றேன். கோவிட் காலமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணமாகின்றோம். பா.ஜ.க வளர்ச்சிக்காக நிச்சயம் சிறப்பாக நன்றாக செயல்படுவேன். பாஜக தனி மனிதருக்கான கட்சி அல்ல. பாஜகவை பொறுத்தவரை கூட்டு முயற்சியாக செயல்படுகின்றோம். அனுபவமும் இளமையும் சேர்ந்து கூட்டு முயற்சியாக பாஜக மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் வளரும்.
வயது என்பது முக்கியம் கிடையாது. பாஜகவில் அனுபவம் இருப்பவர்களுக்கு பதவி கொடுப்பார்கள். பாஜகவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். ஒருபுறம் இளமையானவர்கள் கட்சியில் இருக்கின்றனர். மற்ற கட்சிகளில் ஒரு தலைவர், ஒரு குடும்பம் என இருப்பார்கள். மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் ஒன்றாக இணைத்து செல்ல பயன்படுத்துவோம். ஒரு கூட்டு முயற்சியாக கட்சி வழிநடத்தப்படும் பாஜக தனி மனித கட்சி கிடையாது. இங்கு வயது முக்கியமில்லை. அனைத்து தலைவர்களையும் ஒன்றாக அரவணைத்து, கூட்டு முயற்சியாக மிகப் பெரிய கட்சியாக பாஜகவை வளர்போம். தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் கிராமம் உள்ளது. அனைத்து கிராமங்களிலும் பாஜகவை கொண்டு சேர்ப்பது முதன்மையான பணியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
பேரணியாக சென்னை புறப்பட்ட அண்ணாமலைக்கு வ.உ.சி. மைதானம் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் முழங்க, மலர் தூவி அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை, “கோவை பாஜகவின் இரும்பு கோட்டை. அசைக்க முடியாத கோட்டை. நமது பயணம் என்பது பாஜக கட்சிக்கான பயணம். 3 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வரும்போது, நிச்சயமாக தமிழகத்தில் பாஜக முக்கியமான மாற்று சக்தியாக இருக்கும். அதிகளவு எம்.பி.க்கள் இங்கிருந்து பாராளுமன்றத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறார். அற்புதமான மழை பெய்கிறது. அருமையான மழை மூலம் ஆண்டவன் ஆசிர்வாதத்தை கொடுத்து அனுப்புகிறார்.
பாஜகவை பொறுத்தவரை தலைவன் என்ற வார்த்தை இல்லை. சேவகன் மட்டுமே. உங்களுக்கு சேவைசெய்ய சென்னை செல்கிறேன். பாஜக ஆட்சியமைக்கவும், எம்.எல்.ஏ, எம்.பிக்களை தரவும் கோவை காத்திருக்கிறது. இது ஆரம்பம் மட்டும்தான். முடிவு அல்ல. கட்சியை வீடு வீடாக கொண்டு செல்வோம். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்போம். மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஊர் கூடி தேர் இழுப்போம். கடுமையாக உழைப்போம். கட்சியை வளர்ப்போம்” எனத் தெரிவித்தார்.