கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பங்களாதேஷ் நாட்டுடன் நீண்ட நெடிய உறவு நமக்கு இருந்தது. மதவாத சக்திகளின் கை ஓங்கும் போதெல்லாம் நம்முடைய உறவுக்கும், நெருக்கத்துக்கும் சவால் வருகிறது. இதை எதிர் கொள்ளும் நிலையில் இருக்கின்றோம். உலக அமைதிக்கு வங்காளதேசம், இந்திய உறவு மிக முக்கியமானது, நிச்சயமாக மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தமிழக அரசு தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்துவதால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் போட்டிகளை சமாளிக்க முடியாது. நிறைய உதவிகளை மாநில அரசு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த தொழில் காலத்திற்கும் நிலைக்க முடியும்.
உலகம் முழுவதும் ஜவுளித்தொழில் வளர்ந்து வருகின்றது. இந்த சூழலில் நம் பகுதியை விட்டு இந்த தொழில்கள் வேறு நாட்டிற்கோ, வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது. இதை தவிர்க்க மாநில அரசு ஐவுளி துறை சாரந்தவர்களின் குறைகளை கேட்டறித்து தீ்ர்க்க வேண்டும். தமிழகத்தில் போதை ஒழிப்பு வரவேற்க பட வேண்டியது. கஞ்சா நடமாட்டம் என்றால் கஞ்சா அதிகமாகிவிட்டது என பொருள் கொள்ளக்கூடாது. அதிக நடமாட்டத்தில் இருக்கும் கஞ்சாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தான் இதை பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் கஞ்சாவையும், இதர போதைப் பொருள்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன். அனைவரும் இதை வரவேற்க வேண்டும். முன்னாள் காவல் துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் இல்லத்தில் எந்த அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த குற்றசாட்டும் சுமத்தப்பட்டதாக தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.