World Elephant day : அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதேவேளையில் அங்கு நடந்த இரண்டு சம்பவங்கள் பரவலான கவனத்தை ஈர்த்தன. நிலச்சரிவில் இருந்து தப்பி வந்த மூதாட்டிக்கு அரணாக ஒரு காட்டு யானை நின்றதும், கூட்டமாக வெளியேறிய காட்டு யானைகள் எச்சரிக்கை ஒலி எழுப்பி ஒரு குடும்பத்தை காப்பாற்றியதுமே அந்த சம்பவங்கள்.


சில மனிதர்கள் உயிர் பிழைக்க காரணமாக இருந்த காட்டு யானைகள், பல மனிதர்களின் நலமுடன் வாழ காடுகளை உயிர்ப்புடன் வைக்கும் காரணியாகவும் இருக்கின்றன.


World Elephant day : யானைகளின் சிறப்பு


காடு வளமாக இருந்தால்தான், நாடு வளமாக இருக்க முடியும். அத்தகைய காட்டின் வளர்ச்சியை அதிகரிக்க யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். யானை வழக்கமாக தினந்தோறும் 200 முதல் 250 கிலோ அளவு உணவை உட்கொள்ளும். அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். யானை உட்கொள்ளும் 200 முதல் 250 கிலோ உணவில் 10 விழுக்காடு விதைகளும், குச்சிகளும் இருக்கும். 10 விழுக்காடு என்பது 20 முதல் 25 கிலோ விதைகள் மற்றும் குச்சிகளாகும். இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன.


அவற்றின் மூலம் மரங்கள், காடுகள் உருவாகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு யானையும் தங்களது வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக காரணமாக இருக்கின்றன என யானை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெரிய மரக்கிளைகளை யானைகள் உடைத்து சூரிய ஒளியை வரச் செய்வதால், ஏராளமான செடி, கொடிகள் வளரவும் யானைகள் வழி செய்கின்றன.




சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


எனினும், யானைகளின் வலசைப் பாதை ஆக்கிரமிப்பு, காடுகளின் வளம் குறைதல் உள்ளிட்ட காரணங்களால் வனத்தை விட்டு யானைகள் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிக்குள் புகுந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் யானைகளின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை.


மனித - யானை மோதல்கள்


பேரூயிரான யானைகள் பலருக்கும் விருப்பமான விலங்காக இருந்து வருகிறது. அதேசமயம் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால் பயிர் சேதங்களும், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அண்மை காலமாக மனித - யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் உணவு பற்றாக்குறையால் நாள்தோறும் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி யானைகளின் வலசைப் பாதை ஆக்கிரமிப்பு, காடுகளின் வளம் குறைதல் உள்ளிட்ட காரணங்களாலும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைய காரணமாக அமைகின்றன.


மின்வேலிகள், ரயில் விபத்துகள், நாட்டு வெடிகளும் காட்டு யானைகள் உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கின்றன. யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழையாமல் இருக்க களைச்செடிகளையும், அந்நிய தாவரங்களை அகற்றவும், அவைகளுக்கு தேவையான உணவை உருவாக்கும் வகையில் பயிர்களையும், தாவரங்களையும் வளர்ப்பதும் முக்கிய தேவையாக இருக்கிறது. அதேபோல யானைகளுக்கு விருப்பமான உணவுகளை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல யானைகளின் உணவு பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் கவலையளிப்பதாக உள்ளது.


மனிதர்கள் நலமுடன் வாழ காடுகள் தேவை. காடு வளமுடன் இருக்க யானைகள் தேவை என்பதை உணர்ந்து யானைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில் மனிதர்களால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சூழலியல் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.