கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன‌. இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.




அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும் போது, "சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது.
ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் அணை கட்ட எதிர்ப்பு எழுந்ததால் அம்முயற்சியை கேரள அரசு கைவிட்ட நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே சில இடங்களில் தமிழக விவசாயிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பையும் மீறி தடுப்பணைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது.




சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் எடுத்து வந்த சுரங்கப்பாதையும் கேரள அரசு மூடி விட்டது. 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் 45 அடி வரை மட்டுமே கேரள அரசு தண்ணீர் தேக்க அனுமதி அளித்து வருகிறது. தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதனால் கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகள் கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை கைவிட வேண்டும். இல்லையெனில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கேரள அரசைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண