Meghalaya Honemoon Murder: மேகாலயாவில் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்வதற்கு முன்பு நடந்த முயற்சிகள் குறித்த தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.
ஹனிமூனில் கணவனை கொன்ற மனைவி:
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியை, அவரது மனைவி சோனம் தனது காதலனுடன் சேர்ந்து மேகாலாயாவில் ஹனிமூன் சென்றபோது கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேகாலயாவில் கொல்வதற்கு முன்பே, ராஜா மீது மூன்று கொலை முயற்சிகளை அவரது மனைவி நடத்தியது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக கிழக்கி காசி மலை காவல் கண்காணிப்பாளர் விவேக் சையிம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “முதல் மூன்று முயற்சிகளில் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ராஜா நான்காவது முயற்சியில் திட்டமிட்டபடி, மனைவி அடங்கிய கும்பலால் கொல்லப்பட்டார்” என தெரிவித்தார்.
தோல்வியில் முடிந்த முதல் மூன்று முயற்சிகள்:
காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ராஜாவை கொல்ல முதலில் கவுகாத்தியில் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சோரா பகுதியில் வைத்து இரண்டு முறை முயற்சி செய்துள்ளனர். அவற்றில் எதுவுமே பலனளிக்காததால் வெய்டாங் பகுதியில் வைத்து இறுதியாக ராஜா கொல்லப்பட்டுள்ளார்.
- கவுகாத்தியில் கொலை செய்ய முயன்றபோது எதிர்பார்த்த சூழல் அமையாததால், சோனம் கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்
- நோங்ரியாட்டில் கொலை செய்ய திட்டமிட்டபோது உடலை அப்புறப்படுத்த சரியான இடம் கிடைக்காததால் திட்டம் முன்னெடுக்கப்படுவில்லை
- மவ்லக்கியத் மற்றும் வெய்சாவ்டங்கிற்கும் இடையே பயணிக்கும்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் கொல்ல முயன்றதும் தோல்வியில் முடிந்துள்ளது.
- கடைசியாக வெய்சாவ்டங்கில் தான் மனைவி சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் ஆகியோரின் திட்டமிட்டபடி, ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவள் தான்.. அவன் தான் - மாறி மாறி குற்றச்சாட்டு:
வழக்கில் தற்போது வரை சோனம், அவரது காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தனது கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியது ராஜ் தான் எனவும், அதில் தானும் பங்கேற்றதாகவும் சோனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மொத்த திட்டத்தையும் முன்னெடுத்து செயல்படுத்தியது சோனம் தான் ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டும் நிலையில், ராஜாவின் கொலையில் முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கூலிப்படை கும்பலுக்கு எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது, அதில் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான சில நாட்களிலேயே கொலை..
மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ராஜா 24 வயதான சோனமை, கடந்த மே மாதம் 11ம் தேதி திருமணம் செய்தார். தொடர்ந்து 20ம் தேதி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு, மனைவியுடன் மேகாலயாவிற்கு ஹனிமூன் சென்றார். அங்கு, மே 23ம் தேதியன்று திட்டமிட்டபடி கூலிப்படையினரின் உதவியுடன் கணவன் ராஜாவை கொலை செய்துவிட்டு, அருகிலிருந்த பள்ளத்தில் மனைவி சோனம் வீசி சென்றார். போலீசாரின் தீவிர தேடலுக்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து அழுகிய நிலையில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தடுத்து சோனம், அவரது காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூவர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.