கோவை, தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அடுத்து கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த 2ஆம் தேதி கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதலுதவி செய்தனர். எனினும் கழுத்தில் ஏற்பட்ட காயம் குணமான பின்னரும், அவருக்கு கழுத்து  வலி இருந்துள்ளது. இதனை அடுத்து அப்பெண்ணிற்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்த போது, 7.5 செ.மீ. அளவுக்கு நீளமான தையல் ஊசி, கழுத்தில் மூச்சு குழாயில் இருந்து கழுத்து தண்டு பகுதியில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அருகில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் கேட்ட போது, தற்கொலை செய்து கொள்ள தான் அந்த ஊசியை கழுத்தில் குத்தியதாக தெரிவித்துள்ளார். 




இதனை அடுத்து மூளைக்கு செல்லும் ரத்த குழாய்க்கு அருகே தையல் ஊசி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து ஊசியை எடுப்பது என்பது சவாலாகவும், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. தண்டு வட மருத்துவர்கள், ரத்த நாள மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள் கலந்து ஆலோசித்து அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். இதன்படி கழுத்தில் இருந்து தண்டுவட எலும்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து மூச்சுக் குழாயில் இருந்து தண்டுவடத்தின் வழியாக கழுத்தின் பின்புறம் சென்று கொண்டிருந்த ஊசி கண்டறியப்பட்டது. பின்னர் நவீன சி.ஆர்.எம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடம் உறுதி செய்யப்பட்டு, அந்த ஊசி மெதுவாக துல்லியமாக வெளியே எடுக்கப்பட்டது.




இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், “அறுவை சிகிச்சையின் போது மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் மற்றும் தண்டுவட பகுதி நரம்புகளும் பாதிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமாக உள்ளார். இது மாதிரி நீளமான தையல் ஊசி கழுத்தில் குத்தியும், முக்கிய நரம்புகள் பாதிக்காமல் இருப்பது அதிசயமே” என அவர் தெரிவித்தார். நீளமான ஊசியை எடுக்கும் சாவலான முயற்சியில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக செய்த மருத்துவர்களை, கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண