கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஸ்னஸ் அட்மினிஸ்டிரேசன் பிரிவின் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் துணை பேராசிரியர் ரகுநாதன். இவர் அப்பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்புவதாகவும், மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 4 மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் எழுத்து பூர்வமாக புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.




பேராசிரியர் ரகுநாதன் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 3 மாணவிகள் கல்லூரி முதல்வருக்கு எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு மாணவி, “ரகுநாதன் தகாத முறையில் பேராசிரியர் என்ற அளவுக்கு மீறி வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மற்றொரு மாணவி, “எனது குடும்ப பிரச்சனைகளை தெரிந்து கொண்டு வாட்ஸ் ஆப்பில் பேசி வந்தார். ரெகார்டு நோட்டு வழங்குவதாக நான் பணியாற்றும் இடத்திற்கு வந்து காரில் வந்து காரில் ஏறச் சொன்னார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். ‘ஏன் என்னை பார்க்க மாட்டிங்கற, நான் அழகா இல்லையா? என சொல்லியபடி கையை பிடிக்க முயன்றார். நான் தடுத்த போது, ‘எனக்கு வைப் இல்ல. பணம் நிறைய இருக்கு. உன்ன நல்லா பாத்துப்பேன்’ என்றார். உடனடியாக நான் காரில் இருந்து இறங்கினேன். அப்போது ’நீ காலேஜ் வந்தா கார்ல தூக்கிட்டு போயி மேரேஜ் பண்ணிடுவ’ என்றார். இதனால் பயந்து கொண்டு கல்லூரிக்கு செல்லவில்லை. எனது நண்பர்கள் தைரியம் தந்ததால் மீண்டும் கல்லூரி சென்றேன். அவர் மீண்டும் போனில் சாட் செய்து தொல்லை அளித்தார். இது போன்ற கேவலமான ஆட்களை சும்மா விட்றாதீங்க” எனத் தெரிவித்துள்ளார். இன்னொரு மாணவி இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்து தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.




பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் ரகுநாதனை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி, நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி வாயிலில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது எனவும், சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிட்டப்பட்டது.