கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஸ்னஸ் அட்மினிஸ்டிரேசன் பிரிவின் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் துணை பேராசிரியர் ரகுநாதன். இவர் அப்பிரிவில் பயிலும் மாணவிகளுக்கு சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்புவதாகவும், மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 4 மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் எழுத்து பூர்வமாக புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 




பேராசிரியர் ரகுநாதன் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 3 மாணவிகள் கல்லூரி முதல்வருக்கு எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு மாணவி, “ரகுநாதன் தகாத முறையில் பேராசிரியர் என்ற அளவுக்கு மீறி வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார். மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மற்றொரு மாணவி, “எனது குடும்ப பிரச்சனைகளை தெரிந்து கொண்டு வாட்ஸ் ஆப்பில் பேசி வந்தார். ரெகார்டு நோட்டு வழங்குவதாக நான் பணியாற்றும் இடத்திற்கு வந்து காரில் வந்து காரில் ஏறச் சொன்னார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். ‘ஏன் என்னை பார்க்க மாட்டிங்கற, நான் அழகா இல்லையா? என சொல்லியபடி கையை பிடிக்க முயன்றார். நான் தடுத்த போது, ‘எனக்கு வைப் இல்ல. பணம் நிறைய இருக்கு. உன்ன நல்லா பாத்துப்பேன்’ என்றார். உடனடியாக நான் காரில் இருந்து இறங்கினேன். அப்போது ’நீ காலேஜ் வந்தா கார்ல தூக்கிட்டு போயி மேரேஜ் பண்ணிடுவ’ என்றார். இதனால் பயந்து கொண்டு கல்லூரிக்கு செல்லவில்லை. எனது நண்பர்கள் தைரியம் தந்ததால் மீண்டும் கல்லூரி சென்றேன். அவர் மீண்டும் போனில் சாட் செய்து தொல்லை அளித்தார். இது போன்ற கேவலமான ஆட்களை சும்மா விட்றாதீங்க” எனத் தெரிவித்துள்ளார். இன்னொரு மாணவி இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்து தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில், பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் ரகுநாதனை உடனடியாக பணிநீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, ”பேராசிரியர் ரகுநாதன் தன்னிடம் பயிலும் மாணவிகளின் பொருளாதார சூழலை தெரிந்து கொண்டு, அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியும், ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். மாணவிகள் புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் துறை ரீதியாக விசாரிப்பதாக கூறிய கல்லூரி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், தவறிழைத்தவரை காப்பாற்ற முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இண்டர்னல் கமிட்டியில் அரசு கூறியுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதும் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, இத்தகைய பேராசிரியர்கள் வேறு எங்கும் பணியாற்றாத வகையில் உத்தரவிட வேண்டும். வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


கோவையில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு காரணமாக உயிரிழந்த விவகாரத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், அரசு கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.