நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 வயது சிறுமி, சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குவதால் பொதுமக்கள் காயமடைந்து வருகின்றனர்.
கடந்த மாதம் இயற்கை உபாதை கழிக்க சென்ற 3 பெண்கள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் கூடலூர் அடுத்த கொலப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக நேற்று முன்தினம் தகவல் பரவியது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டபோதும், அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவோ, அல்லது சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வசந்தராஜ், வைதேகி ஆகியோரின் 4 வயது மகள் கிருத்திகா என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் இருப்பவர்கள் வந்து பார்த்தபோது, சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மக்கள் எழுப்பிய சத்தத்தால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமி கிருத்திகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தொடர்ந்து இதுபோன்று சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.