கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜிடி கார் அருங்காட்சியம் பழங்கால கார்கள், அரிய வகை கார்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த கார்கள் மியூசியத்தில், நாள்தோறும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்த அருங்காட்சியகம் தொடர்ந்து வாகனங்கள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தது. இதனிடையே கார் அருங்காட்சியத்தை பார்வையிட்டு சென்றவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இந்தியா சுதந்திரமடைந்த 1947ம் ஆண்டு முதல் இந்திய வாகனத்துறையின் சாதனைகளை விளக்கும் வகையில், இந்திய கார்களுக்கு எனத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கார் பிரிவு, 10500 சதுரடி பரப்பளவில் 40 கார்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கார்கள் அந்த கால கட்டத்தில் பிரபலமாக இருந்த கார்களாகும். இவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேன்டேர்டு மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் டெம்போ, சிபானி ஆட்டோமொபைல்ஸ், மாருதி உத்யோக், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை. இங்கு வைக்கப்பட்டுள்ள கார்கள் அதன் ஒரிஜினல் தோற்றம் மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள், மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிலின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் மேற்கெள்ளப்பட்ட முயற்சிகளை இந்த அருங்காட்சியகம் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கார் பிரிவு இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இயக்கப்பட்ட முதல் பேருந்து
இந்த அருங்காட்சியகத்தில் ஜி.டி. நாயுடு தயாரித்து கோவையில் முதல் முதலாக ஓட்டிய பேருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பேருந்து தான் கோவையில் இயக்கப்பட்ட முதல் பேருந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. 1920ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பேருந்து, கோவை - உடுமலை - பழநி வழித்தடத்தில் இயக்கப்பட்டது. பெட்ரோலில் இயங்க துவங்கும் இந்த பேருந்து, மரக்கட்டைகளை எரிப்பதன் மூலம் வரும் வாயுவை பயன்படுத்தி ஹைபிரிட் என்ஜின் மூலம் இயக்கப்பட்டது இதன் சிறப்பம்சமாக உள்ளது.
அதுமட்டுமின்றி ஜி.டி. நாயுடு 3 ஆயிரம் ரூபாய் விலையில் தயாரித்த மலிவு விலை கார், பார்வையாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கி வந்த பக்ஷி ராஜா ஸ்டுடியோ எடிட்டிங் ரூம் வசதியுடன் பயன்படுத்திய வாகனமும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போக்குவரத்து உருவான வரலாறு, வாகனங்களின் பரிணாம வளர்ச்சி, 18 மற்றும் 19 ம் நூற்றாண்டில் இருந்த போக்குவரத்துகள், பல அரிய கார்கள் மற்றும் அவற்றின் விபரங்கள் உள்ளிட்டவை போக்குவரத்து மற்றும் கார்கள் குறித்து அறிய உதவியாக அமைந்துள்ளது.
பெரியார் பயன்படுத்திய கேரவன்
பெரியார் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய பயன்படுத்திய கேரவன் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பெரியாரின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் எம்.ஆர்.ராதா பல்வேறு வசதிகளை கொண்ட இந்த கேரவனை பரிசாக அவருக்கு வழங்கியுள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 'செவெர்லெட்’ என்ற சிறிய ரக பேருந்தை வாங்கி, சென்னையில் உள்ள ‘சிம்சன்’ என்ற நிறுவனத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் வசதியான இருக்கைகள், படுக்கைகள், நகரும் படிக்கட்டுகள், சமையலறை, அலமாரி, அலங்காரம் செய்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தனி அறை, புத்தக அலமாரி, கழிவறை, ஜன்னல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கேரவனை பெரியார் தனது நண்பரான ஜி.டி. நாயுடுவிற்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த கேரவன் நன்றாக பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து பேசிய ஜி.டி. அருங்காட்சியகத்தின் மேலாளர் சுரேஷ், “ஜி.டி. கார் அருங்காட்சியகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 70 வெளிநாட்டு கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பார்வையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க 40 இந்திய தயாரிப்பு கார்கள் புதிதாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எங்கும் பார்க்க முடியாத அரிய கார்களை இங்கு பார்க்க முடியும். அதிகளவில் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
வேறு எங்கும் காண முடியாத கார்களை இங்கு பார்த்து ரசித்தது மகிழ்ச்சியளிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த அருங்காட்சியகத்தை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட முடியும். ஒரு நபருக்கு 125 ரூபாயும், குழந்தைகளுக்கு 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குழுவாக வருபவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மொத்தமாக 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.