கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு சுற்றுப்புறத்தை பேணிக் காக்கும் நோக்கில் மரக்கன்றுகளை கொடுக்கும் பெண் பேரூராட்சித் தலைவரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டு சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியின் தலைவராக தேவி மன்னவன் என்பவர் இருந்து வருகிறார். மேலும் எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை அவர், இந்த பேரூராட்சியில் அறிமுகப்படுத்தி வருகிறார். குளங்களை சுற்றிலும் மரங்களை நடுவது கழிப்பிட சுவர்களில் தூய்மையை பேணும் வகையில் ஓவியங்கள் வரைவது எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக மரங்களை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மரங்களை அதிகளவில் வைத்து வளர்த்து சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைக்கும் நோக்கிலும், பசுமையான சூலூரை உருவாக்கும் வகையிலும் சூலூர் பேரூராட்சியில் பிறப்பு சான்றிதழ் பெற வரும் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ் உடன் ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்.




இந்த மரக்கன்றுகளை வாங்கிச் செல்லும் பெற்றோர்கள் தாங்கள் வீட்டில் வைத்து வளர்க்கலாம். அப்படி வீட்டில் வளர்க்க முடியவில்லை என்றால், அவர்களுக்கான பசுமை வனம் ஒன்றையும் தேவி மன்னவன் ஏற்படுத்தி இருக்கிறார். அங்கு தங்களது குழந்தைகளின் பெயர்களில் பெற்றோற்கள் மரங்களை நட்டு வளர்க்கலாம். மரங்கள் வளர்ப்பதற்காக சொட்டு நீர் பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதில் மரங்களை வைத்து அவர்களாகவே தண்ணீர் ஊற்றி குழந்தை வளர வளர அந்த மரமும் வளரும் என்ற நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார். இந்த திட்டம் இப்பகுதி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கும் போது, ”கோவையில் இது போன்ற நிகழ்வு வேறு எங்கும் நடந்ததில்லை. இது வரவேற்கக் கூடியதாக உள்ளது. குழந்தையை வளர்ப்பது போல மரத்தையும் வளர்ப்போம் என்பது புதுமையாக உள்ளது. இது மேலும் மேலும் வளர வேண்டும். இது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர். இது குறித்து சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் பேசும் போது, ”சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதால் ஆரோக்கியமான சூழல் உருவாகும். முதல்வர் தூய்மையான தமிழகத்தை உருவாக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்காக இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.


Legends of Coimbatore: கோவையின் மாமனிதர்கள் வரலாறை விளக்கும் சாலை ; மாநகராட்சியின் அசத்தல் முயற்சி!


Mudumalai Tiger Reserve: முதுமலையில் அதிர்ச்சி... 2 புலிக்குட்டிகள் உயிரிழப்பு ; வனத்துறையினர் விசாரணை