கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். அமைச்சருடன் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி,  சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கோவை  மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர்  வாளையார் அருகே  மாவுத்தம்பதி பகுதியில்,  ஜிகா வைரஸ் பரவல் குறித்தும், கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பரவுவது குறித்தும்  மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் எல்லையோர கிராமங்களில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் வாளையார் சோதனை சாவடியில்,கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.




இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கொரொனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் புதிது புதிதாக வைரஸ்கள்  உருவாகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என்ற பெயரில் புதிய வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகின்றது. ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் , தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள்  சிறிய தலைகளுடன் பிறக்கும் நிலை இருக்கின்றது. இதனால் தமிழகத்தின் அனைத்து எல்லை பகுதிகளையும் பரிசோதனை செய்ய முதல்வர்  உத்திரவிட்டுள்ளார். வாளையார் எல்லை பகுதியில் மாவுத்தம்பதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தெரு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம்  முழுவதுக்குமான  விழிப்புணர்வு பணி. வீட்டை சுற்றி இருக்கும் நன்னீர் தான் ஏடீஸ் கொசு உற்பத்தி மையம். ஏடீஸ் கொசுக்கள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படுகின்றது. தமிழகம் முழுவதும் 14833 வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. கொசுவின் லார்வா நிலையிலேயே நீர் நிலைகளில் மீன்களை வளர்த்து , கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.


இதுவரை தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை. தமிழகத்தின் அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மாதத்திற்கு 40 முதல் 50  பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். ஐனவரி முதல் இதுவரை   2800 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வெப்பமானிகளின் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே கேரளாவில் இருந்து வரும் மக்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.




சென்னைக்கு அடித்தப்படியாக கோவைக்கு தடுப்பூசிகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யபடுகிறது. 10 லட்சத்து 97 ஆயிரம் தடுப்பூசிகள் கோவைக்கு  கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், 25 சதவீதம் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகையினை தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக இந்த திட்டம் கோவையில் இன்று செயல்பாட்டிற்கு வர உள்ளது. எந்தெந்த நிறுவனம் எவ்வளவு தொகை கொடுத்து சி.எஸ்.ஆர் தொகையினை இதற்கு ஒதுக்குகின்றனர் என்பது இன்று மாலை தெரிய வரும்.




தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  கூறுவது தவறு. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம். எங்கே தனியருக்கு கொடுத்தர்கள் என்பதை ஆதாரபூர்வமாக அவர்  சொன்னால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாலை 7 மணி வரை கோவையில் தான் இருப்போம். வானதி சீனிவாசன் நேரில் வந்து சொல்லாம். தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை. நமக்கு இது வரை 1,80,31670 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளது. இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவை. டோக்கன் வழங்குவதில் திமுகவினர் தலையீடு இருந்தால் பாரபட்சமின்றி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்போம். தடுப்பூசி போடும் பணியில் தன்னிறைவு அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை  கவலைக்கிடமாக இருக்கின்றது. அப்பலோ  மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கின்றோம் , அவர் நலம் பெற்று வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்” என அவர் தெரிவித்தார்.