கோவையை சேர்ந்த சீவகவழுதி என்ற இளைஞர் ஒரு இலட்சம் ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் திரைப்பட தனுஷ் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர் சீவக வழுதி. இவர் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு பணிக்கு சென்றுக் கொண்டுள்ளார். ஓவியத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் சீவகவழுதி, ஓவியத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்டேப்ளர் பின்களை பயன்படுத்தி ஓவியம் வரைவது, நூல் பயன்படுத்தி ஓவியம் வரைவது போன்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஸ்டேப்ளர் பின்களை பயன்படுத்தி 10 அடி உயரத்தில் கர்ணன் தனுஷ் மற்றும் காட்டுப்பேச்சி கதாபாத்திரத்தை ஒரே ஓவியத்தில் தனித்துவமாக உருவாக்கியுள்ளார் ஓவியர் சீவக வழுதி. இந்த ஓவியம் அனைவரையும் வெகுவாக கவரும் விதத்தில் வரைந்துள்ளார். 19 நாட்கள் தொடர் முயற்சியின் பலனாக இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.




இது குறித்து சீவக வழுதி கூறுகையில், ”ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் காரணமாக புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகிறேன். இன்று இருக்கும் சூழலில் கம்யூட்டர் சாப்ட்வேரை பயன்படுத்தி ஒரு ஆர்டிஸ்ட் எந்த மாதிரியான ஓவியத்தையும் எளிதாக வரைய முடியும். ஆனால் அதை விட மூளையின் வலிமை அதிகம். அதை நிரூபிக்கும் வகையில் ஸ்டேப்ளர் ஆர்ட் வரைய முயன்றேன். இந்தியாவில் இது போன்ற ஓவியத்தை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. அதனால் புதிய முயற்சியாக இதனை செய்து பார்க்க முடிவு செய்தேன்.




அண்மையில் திரையில் பார்த்த கர்ணன் திரைப்படமும், காட்டுப்பேச்சி கதாபாத்திரமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கத்தின் காரணமாக அப்படத்தை கெளரவப்படுத்தும் வகையிலும், நடிகர் தனுஷ் நான்கு முறை தேசிய விருதுகளை வாங்கியதை பெருமைப்படுத்தும் வகையிலும் இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன். இந்த ஸ்டேட்ளர் ஆர்ட்டை யாரும் அவ்வளவு எளிதில் முயற்சிக்க மாட்டார்கள். இந்த ஓவியத்தை வரைய அதிக நேரம் எடுக்கும். கலர் வித்தியாசம் கொண்டு வர பல விதங்களில் ஸ்டேப்ளர் அடிக்க வேண்டும். சுமார் 1 இலட்சம் ஸ்டாப்பிளர் பின்கள் கொண்டு ஒவியத்தை வரைந்துள்ளேன். இது குறித்தான தகவல் அறிந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வாழ்த்துகள் தெரிவித்தார். கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.




முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நூலிலால் ஒரு ஒவியத்தை வரைந்தேன். இதற்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்வேன்” என அவர் தெரிவித்தார்.


லட்சக்கணக்கான ஸ்டேப்ளர் பின்களை பயன்படுத்தி வரையப்படுள்ள இவரது ஓவியத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.