கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தில், குளம் நிரம்ப யார் காரணம் என்பதில் நேற்று முந்தினம் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  முன்னாள் சட்டபேரவை துணைதலைவரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமன் மீது கொரோனா விதிமுறைகளை மீறுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.




இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் மீது திமுகவினர் தாக்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வந்து பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல் துறை தலைவரிடம் புகாரளித்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் அர்ஜூனன், கேர்.ஆர் ஜெயராமன், தாமோதரன் ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர். அதனைதொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, “பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோதவாடி பகுதியில் விவசாயிகளுடைய நீண்ட நாள் கோரிக்கையான குளத்தை தூர்வாரும் பணி கிடப்பில் கிடந்தது. அதை அப்போது சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அந்த குளத்தை சீரமைத்து கொடுத்ததால், தற்போது குளம் நிரம்பியுள்ளது. இதனை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். 




தொடர்ச்சியாக மழை பெய்து மழை அதிகமாக வந்து தண்ணீர் தேங்கி அந்த குளம் தொடர்ந்து பொதுமக்கள் எல்லாரும் பொங்கல் விழா நடைபெற்றது. அதற்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகத்தினர் அரசு பதவியில் இல்லாதவர்கள் அங்கே வந்து தகாத வார்த்தையில் பேசினர். கல் மற்றும் செருப்புகளை வீசி தாக்கிய சம்பவம் நடைபெற்றது. ஆனால் மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமால்  பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்கு போட்டு உள்ளார்கள். தொடர்ச்சியாக  கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடர்ந்து திமுக உத்தரவின் பேரில், பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். திமுக மீது எந்த வழக்கும் போடாத போக்கை கண்டித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பது குறித்து கேள்விக்கு, எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கமால் சென்றார்.




இதேபோல கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் காளிராஜை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். பெண் உரிமை என்ற பெயரில் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் கருத்தரங்கு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சு.ப.வீரபாண்டியன் குறித்து குறித்து இழிவாக பேசியதாக புகார் தெரிவித்தனர். மேலும் ஹெ.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவ்வமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.