கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய கமல்ஹாசன்


சட்டமன்ற தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். கமல்ஹாசன், பாஜக சார்பில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட்டதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. வாக்கு எண்ணிக்கையின் போது கமல்ஹாசனுக்கும், வானதி சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. துவக்கத்தில் முன்னிலையில் இருந்த கமல்ஹாசன், இறுதிக்கட்டத்தில் பின்னடவை சந்திக்க 1726 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.




கோவையை கோட்டை விட்ட திமுக


கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்ப கோவையில் திமுக கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடியது. திமுக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்ட, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியும் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கோவையை திமுக அரசு புறக்கணிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.


கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்ற முதல்வர்



கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக மே மாதத்தில் கோவையில் தொற்று பாதிப்புகள் உச்சத்தை தொட்டது. தினசரி கொரோனா பாதிப்பில் கோவை பல மாதங்கள் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தது. மே மாதத்தில் மட்டும் 90 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மே 27 ம் தேதியன்று உச்ச பாதிப்பாக 4734 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அம்மாதத்தில் மட்டும் 552 பேர் உயிரிழந்தனர். .எஸ்.ஐ மருத்துவமனையில் பி.பி.. கிட் அணிந்தபடி கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வு செய்தார்.


கவனம் ஈர்த்த பழங்குடியின கிராமத்தின் முதல் பட்டதாரி


ஜீன் மாதத்தில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமமான சின்னாம்பதியில், ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கல்வி பயில முடியாத பழங்குடியின குழந்தைகளுக்காக அக்கிராமத்தை சேர்ந்த முதல் பட்டதாரியான சந்தியா வகுப்புகளை நடத்தி அறிவு பசி தீர்த்தார். திருப்பூரில் பணியாற்றி வந்த சந்தியா ஊரடங்கினால் ஊர் திரும்பிய நிலையில், இச்சேவையை செய்து வந்தார். கல்வி கற்பதோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் கற்றுத் தந்த சந்தியாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.




தோல்வியடைந்த ஆப்ரேசன் பாகுபலி


ஜீன் மாதத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானை இயல்பிற்கு மாறாக தொடர்ந்து சுற்றி வந்தது. இதையடுத்து அந்த யானையை பிடித்து ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலர் பொருத்தி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். வனத்துறையினர் வியூகங்களை அந்த யானை தவிடுபொடியாக்கியதாலும், தொடர் மழை காரணமாகவும் அம்முயற்சி கைவிடப்பட்டது.


வைரலான யூ டியூப்பர் ரித்விக்




கோவையை சேர்ந்த யூ டியூப்பரான 7 வயது சிறுவன் ரித்விக் நடித்து வெளியிட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றன. அதேசமயம் விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு சில விமர்சனங்கள் தங்களை காயப்படுத்துவதாக ரித்விக்கின் தந்தை ஜோதிராஜ் வேதனை தெரிவித்தார்.


கொங்குநாடு மாநில கோரிக்கை


ஜீலை மாதத்தில் தமிழ்நாட்டில் மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக உருவாக்க வேண்டுமென கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி, இக்கோரிக்கைக்கு கொ.மு., கொ..தே.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாஜக மாநிலத் தலைமை இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.


எஸ்.பி.வேலுமணி வீட்டில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை




ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனையில் 13 இலட்ச ரூபாய் பணம், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத்தொகை, முக்கிய ஆவணங்கள்ம் பத்திரங்கள், வங்கி லாக்கர் சாவி, ஹார்ட் டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை


செப்டம்பர் மாதம் கோவை விமானப்படை பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக வந்த 28 வயதான பெண் அதிகாரியை, லேப்டினல் அமிதேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வந்த நிலையில், பெண் அதிகாரி கோவை மாநகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக அந்த பெண் அதிகாரி புகாரில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை கோவை காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், விமானப்படை விசாரணைக்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சலுகை


பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் 9 பேரை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்க சேலம் சிறையில் இருந்து 9 பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் மீண்டும் சேலம் திரும்பும் வழியில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்கள் உறவினர்களை சந்திக்க காவல் துறையினர் அனுமதித்தனர். இது தொடர்பாக காட்சிகள் வெளியான நிலையில், காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


கொட்டித் தீர்த்த வட கிழக்கு பருவமழை




வட கிழக்கு பருவ மழை கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலாக பெய்தது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 30 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் சராசரி அளவை காட்டிலும் 90 சதவீதம் அதிகம் மழை பெய்தது.


பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை




நவம்பர் மாதம் 12ம் தேதி கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


இரயில் மோதி யானைகள் உயிரிழப்பு


நவம்பர் மாதம் 26 ம் தேதியன்று கோவை மாவட்டம் மாவூத்தம்பதி பகுதியில் இரயில் மோதி கர்ப்பிணி யானை உள்ளிட்ட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இரயிலை வேகமாக இயக்கி விபத்து ஏற்பத்திய இரயில் ஓட்டுநர் சுபயர் மற்றும் உதவி ஓட்டுநர் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போத்தனூர் - பாலக்காடு இரயில் பாதையில் இதுவரை 28 யானைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளன.




நீட் தேர்வில் வென்ற மலசர் பழங்குடியின மாணவி


கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பகுதியை சேர்ந்த சங்கவி என்ற மலசர் பழங்குடியின மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தினார். கடந்த 2020 ம் ஆண்டில் சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தவித்த சங்கவி குறித்து, ஊடகச் செய்திகளால் சாதி சான்றிதழ் மற்றும் கல்வி உதவி கிடைத்தது. இதனால் இரண்டாவது முறையாக் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.




ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி


கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெல்லிங்டன் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சூலூர் கொண்டு வரப்பட்டு, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய பகுதிகளில் வழி நெடுகளிலும் நின்ற பொது மக்கள் இராணுவ வீரர்களின் உடல்களை ஏற்றி வந்த வாகனங்கள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை




கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கூடுதல் விசாரணை செய்து வருகின்றனர். கோடநாடு மேலாளர் நடராஜ் மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் ஆகியோரிடம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.