நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது.




புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலையில் மறியல்  போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒன்பதாவது நாளாக இன்று வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் மசினகுடி பகுதியில் புலி தாக்கி உயிரிழந்த மங்கள பசவன் குடும்பத்தினரை சந்தித்து வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசணை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "4 முறையாக கூடலூரில் ஒரு புலி ஆட்களை அடித்துள்ளது. அந்தப் புலியை பிடிக்கும் நோக்கில் கூடலூரில் பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.




தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், சிறப்பு அதிரடிப்படையினர், கேரளா புலிகள் பிடிக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர ஈடுபட்டுள்ளனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்ட் ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை பிடிக்கும் பணியில் 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் 3 ட்ரோன்கள், அதி நவீன கேமராக்கள், துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. புலி விரைவில் சிக்கும் என நம்புகிறோம். புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிக்கிறோம். அது முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி புலியை பிடிப்பது என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்கள் எல்லையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. ஒரு புலி ஒரே பகுதியில் இருக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு நிமிடத்தில் புலியை சுட்டு விடலாம். ஆனால் வேறொரு புலிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் புலியை பிடிப்போம். புலி தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.