கேரளா மாநிலம் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர் வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  




இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் கேரளாவை போல நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 4 குழுக்களாக ஆய்வு செய்தனர். மொத்தம் 73 ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 17 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்புள்ள 57.45 கிலோ பழைய ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 35 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 3 கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.




ஷவர்மா தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றவர்களிடத்தில் மட்டும் தான் சிக்கன் போன்ற மூல உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். சிக்கனை மசாலா உடன் கலக்கும் போது, கையுறை அணிந்திருக்க வேண்டும். தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என உணவக உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் ஷவர்மா அடுப்பினை தூசிகள் படியுமாறு சாலையோரத்திலோ அல்லது உணவகத்தின் வெளியிலோ வைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும். ஷவர்மா நன்றாக வேக வைத்த பின்னர் தான் நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும். அடுப்பில் வைத்து வெந்த 2 மணி நேரத்திற்கு ஷவர்மாவை பரிமாறி விட வேண்டும். குறைந்தபட்சம் 70 டிகிரி செல்சியஸ் வேக வைக்க வேண்டும். மீதம் ஏதும் இருப்பின், அதனை பரிமாறாமல் கழிவாக அகற்றிவிட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.




இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் ஷவர்மா தயாரித்து விற்பனை செய்தால் கடை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஷவர்மா தயாரிப்பது தொடர்பான சுகாதாரக் குறைபாடுகள் குறித்து 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.