Watch Video : இரவில் ஒளிரும் ஆனைமலை காடுகள் ; மனதை மயக்கும் மின்மினி பூச்சிகளின் ஒளி சிதறல்கள்..!
இலட்சக்கணக்கான மின்மினி பூச்சிகள் செடிகள் மற்றும் மரங்களில் அமர்ந்து ஒளி சிதறல்களால் காடுகளை ஒளிரச் செய்தது. இதனால் மஞ்சள் மற்றும் பச்சை நிற ஒளி வெள்ளத்தில் காடு ஒளிர்ந்தது.

கோவை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் லட்சக்கணக்கான மின்மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் ஒளி உமிழ்ந்த காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஆனைமலை காடுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. உலகின் மிகவும் தனித்துவமான வனப்பகுதிகளில் ஒன்றாக விளங்கும் ஆனைமலை காடுகள், புலிகள் காப்பகமாகவும் விளங்கி வருகிறது. இந்த வனப்பகுதிகள் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன.
Just In




மிகவும் மெல்லியதாக கருதப்படும் இந்த காடுகளில் மின்மினி பூச்சிகள் அவ்வப்போது லட்சக்கணக்கில் கூடி ஒளி உமிழும் நிகழ்வுகள் அபூர்வமாக நடைபெறுவது உண்டு. அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்றுள்ளது. டாப் சிலிப் வனப் பகுதியில் கூடிய இலட்சக்கணக்கான மின்மினி பூச்சிகள் செடிகள் மற்றும் மரங்களில் அமர்ந்து ஒளி சிதறல்களால் காடுகளை ஒளிரச் செய்தது. ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு ஒளியை சிதறியபடி பறந்தும் சென்றன. இதனால் மஞ்சள் மற்றும் பச்சை நிற ஒளி வெள்ளத்தில் காடு ஒளிர்ந்தது அதிசய உலகம் போல காட்சியளித்தது.
இதனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படங்களில் ஆங்கில திரைப்படமான அவதார் திரைப்படத்தில் வரும் ஒளிச்சிதறல் காட்சிகளை போன்ற புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஆண் மின்மினிப்பூச்சிகள் பெண் பூச்சிகளை ஈர்ப்பதற்காக ஒளியை வெளியிடுவது வழக்கம். பொதுவாக சில ஆயிரம் மின்மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் காடுகளுக்குள் இரவு வேளைகளை ஒளி உமிழ்ந்தபடி பறப்பது வாடிக்கை தான் என்றாலும், லட்சக்கணக்கான பூச்சிகள் ஒரே நேரத்தில் பறந்தபடி, ஒளியை உமிழ்வது ஆச்சரியமான ஒன்று எனவும், இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வனத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல கேரள மாநிலம் நெல்லியம்பதி வனப்பகுதிகளிலும் அடிக்கடி இலட்சக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளிச் சிதறல்களால் காடுகளை ஒளிரச் செய்யும் நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.