கோவை கரும்புக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கரும்புக்கடை காவல் துறையினர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி என்பதும், அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் ஆகியவற்றை வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபடோமெயின் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாநகர காவல் ஆணையாளர் பேட்டி


இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகரில் போதை பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு தனி படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஒரு சில மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மெடிக்கல் சிரஞ்சுகளை வாங்கி ஊசியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 




அங்கு ஊப்பிலி என்ற இடத்தில் வங்கி இருக்கின்றனர். அங்கு பிரவீன் செட்டி என்பவர் மருந்து கடை வைத்து நடத்தி வரும் நிலையில், கோவையில் அவர் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ஒரு மாத்திரையை 60 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதார். தற்பொழுது இவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


மாணவர்களிடம் விழிப்புணர்வு


கோவை மாநகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே இவற்றையும், குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்துள்ளதால், இது போன்ற மாத்திரைகளை நோக்கி செல்கின்றனர். கோவையில் இது போன்ற மாத்திரைகள் விற்கப்படுவது தடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெளிமாநிலங்களுக்கு சென்று வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். நேற்றைய தினம் காந்திபுரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தெரிந்தே குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடும். இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஆலோசித்து அறிவுரைகளை வழங்கி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.