கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை காடுகள், யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன. இந்தக் காடுகளில் அதிகளவிலான புலிகள் இருப்பதன் காரணமாக, புலிகள் காப்பகமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன.


உலகின் மிகவும் தனித்துவமான வனப்பகுதிகளில் ஒன்றாக விளங்கும் ஆனைமலை காடுகள், புலிகள் காப்பகமாகவும் விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தன் காரணமாக  வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியது. ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டன. இட் இதன் காரணமாக டாப்சிலிப் பகுதியில் உள்ள யானைகள் முகாமில் இருந்த வளர்ப்பு யானைகள் தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் இடங்களை தேடி அலைந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் மெல்ல மெல்ல பசுமை திரும்பி வருகிறது. இதனால் அப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்து வருகின்றன.


 






இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது. குட்டியுடன் உலா வரும் இந்த யானைக் கூட்டம், அடர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்துள்ளன. அப்போது குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன. குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்க, ஒரு பெண் யானை உறங்கும் யானைகளுக்கு காவலாக நின்றிருந்தது. இந்த அழகிய காட்சிகளை அப்பகுதியில் இருந்த புகைப்படக்கலைஞர் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சிகளை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர் வனத்தில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் வகுப்பு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். நமது சொந்தக் குடும்பங்களைப் போலவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் வைரலாகி வருகிறது.