கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக். 30 வயதான இவர், கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்து நடத்து வருகிறார். இவரது மனைவி ராசி வயது 27. இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவர் மருத்துவ உயர் படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து ராசி படித்து வந்தார்.
இதனிடையே நீட் தேர்வு எழுதுவது குறித்து ராசியின் மனதில் பயம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்கச் சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் மதியம் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் டாக்டர் செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அறைக்கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ராசி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து செந்தாமரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது கணவன் சரண் மற்றும் குடும்பத்தினரை அழைத்து தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்த ராசியை கீழே இறக்கி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் ராசி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் தனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் விசாரணை செய்தனர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ராசியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராசியின் தாய் டாக்டர் செந்தாமரை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6வது மாதத்தில் பெண் டாக்டர் ராசி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தனிப்பிரிவு காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன ராசி கடந்த மூன்று நாட்களாக தேர்வு பயத்தில் நான் நீட் தேர்வு எழுத மாட்டேன் என கூறி வந்ததாகவும், அதற்கு அவரது வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர் கண்டிப்பாக நீ தேர்வு எழுத வேண்டும் என கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளதாகவும், அதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).