நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை நடைபெறவுள்ள 124 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். இதற்காக  இன்று  கோவையில் இருந்து உதகை புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் செல்லும் வழியில் அவருக்கு குன்னூர் பொதுமக்களும், திமுக நிர்வாகிகள் என பலர் லெவல்கிராஸ் பகுதியில் வரவேற்பு அளித்தனர். அப்போது மேளாதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னூர் வந்த முதலமைச்சர் பொதுமக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர், "நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறை. மக்களோடு மக்களாய் இருந்து உங்களுக்கு பல்வேறு உதவிகளை என்றும் வழங்குவேன்” எனத் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து உதகை சென்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழகம் மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடி மகிழ்ந்தார். இது அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.



பின்னர் உதகை சேரிங்கிராஸ் பகுதிகளில்  தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முதலமைச்சர்  ஸ்டாலின் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கலைஞர் தலைமையில் 5 முறை ஆட்சியில் இருந்த போது ஏராளமான திட்டங்களை கொடுத்து இருக்கிறோம்.  அந்த திட்டங்கள் தொடர மீண்டும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என பிரச்சாரத்தின் போது கேட்டுக் கொண்டோம். எங்கள் வாக்குறுதிகளை நம்பி வாய்ப்பளித்து, உதகை திமுகவின் கோட்டை என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்.  இது நமது ஆட்சி, நமது ஆட்சி பொறுப்பேற்று முதல் ஆண்டை நிறைவு செய்து  இரண்டாவது வருடத்தில் நடை போடுகிறோம். 



தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் நூற்றுக்கு 70 சதவீதத்தை ஓரே வருடத்தில் செய்து முடித்திருக்கிறோம். இப்படிப்பட்ட ஆட்சியை உருவாக்கித் தந்த உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்திருக்கிறேன். ஆட்சிக்கு வந்த போது கொரொனா நோய் மக்களை வாட்டி வதைத்தது எனவும் பொறுப்பேற்றவுடன்  கொரொனா நோயில் விடுபட உரிய நடவடிக்கை எடுத்து நோய் பரவல் தடுத்து நிறுத்த பட்டது. அதன் பின்னர் மழையால் ஏற்பட்ட பாதிப்பையும் கையாண்டு இருக்கிறோம். பத்தாண்டுகளில் செய்திருக்க வேண்டிய விஷயங்களை இந்த ஒரே ஆண்டில் செய்து முடித்திருக்கிறோம். இதனால் தான் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். என்றைக்கும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் உதகை மக்களுக்கு நன்றி” அவர் தெரிவித்தார்.