சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி என்றெல்லாம் கள்ளிச்செடிகளை நாம் பார்த்திருப்போம். மலைப்பகுதிகள், காடுகளில் கள்ளிச்செடிகள் அதிகளவில் காணப்படுவதுண்டு. ஒரு சில இடங்களில் விவசாயிகள் கள்ளிச் செடிகளை வேலியாக கூட வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மாடித்தோட்டம் அமைத்து வீட்டிலேயே ஆயிரம் கள்ளிச் செடிகளை வளர்த்தும், பராமரித்தும், விற்றும் வருமானம் பெற முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார் கோவை வடவள்ளியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஷேமலதா.




எம்.எஸ்சி., எம்.பில்., பட்டம் பெற்ற தாவரவியல் ஆசிரியையான இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் மூலமாக அலங்கார செடிகள் மற்றும் அவற்றின் விதைகளையும் விற்பனை செய்கிறார். 2500 க்கும் மேற்பட்ட தாவர வகைகளை வளர்த்து வந்தாலும், அதில் முதன்மையாக இடம் பெற்று இருப்பவை கள்ளிச்செடிகளே. இவரது வீட்டில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களில், கண்களை கவரும் பல வகை கள்ளிச் செடிகளை வளர்த்து வருகிறார்.




முள் இருக்கும் கள்ளிசெடிகள் முதல் முள் இல்லாத கள்ளிச்செடிகள் மட்டுமல்லாது கற்றாழையிலும் பல வகைகளை வளர்த்து வரும் ஷேமலதா, செடி வளர்க்கும் ஆர்வத்தை தாத்தாவிடம் இருந்து கற்று கொண்டதாக கூறுகிறார். தாயார், கணவர் ஆதரவோடு ஏழாண்டுகளுக்கு முன் ஆன்லைன் மூலம் விற்பனையில் இறங்கியதாகவும், இதன் மூலம் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறுகிறார்.




இது குறித்து ஷேமலதா கூறுகையில், ”கள்ளிச்செடி வீட்டிற்கு ஆகாது என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. ஆனால் கள்ளிச் செடிகளால் பல நன்மைகள் உள்ளன. இவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, நல்ல வருமானமும் பெற முடியும்.


தாவரவியல் படித்த நான், அதை பயன்படுத்தி பகுதி நேரமாக வருமானம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீட்டில் அலங்காரச் செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் இப்போது கள்ளிச் செடிகளில் மட்டும் ஆயிரம் வகையானவை இருக்கின்றன. நானே விதை உற்பத்தியும் செய்கிறேன். வீடுகள், அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்ய விரும்புவோர் பலரும் கள்ளிச் செடிகளையும், அவற்றின் விதைகளையும் விரும்பி வாங்குகின்றனர். முகநூல் மூலம் கள்ளிச்செடிகளை வாங்கியும், விற்றும் வருகிறேன். வெளிநாடுகளில் இருந்தும் அரிய வகை கள்ளிச்செடிகளை வாங்கி வளர்த்து வருகிறேன். வேறு எங்கும் கிடைக்காத பல வகையான அரிய கள்ளிச்செடிகள் என்னிடம் உள்ளன.




இந்த செடிகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பதுடன், மனதுக்கும் இதம் அளிக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் இவற்றின் விற்பனை அமோகமாக இருந்தது. கள்ளிச்செடிகள் வளர்க்க அதிக பராமரிப்பு தேவையில்லை. தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டியதில்லை. எளிய வேலைகளால் பராமரிக்க முடியும்.




இவை வீட்டிற்குள் வெப்பத்தை குறைத்து குளுமையான சூழலை உருவாக்கும் தன்மை கொண்டவை.. மின்னணு சாதனங்களில் இருந்து வரும் கதிர் வீச்சையும் குறைக்கும். அதனால் ஏற்படும் மனச் சோர்வை நீக்கி புத்துணர்வை தரும். காற்று மாசை குறைக்கும். மருத்துவ குணம் கொண்டது. குறைந்த அளவிலான இடத்தில் கள்ளிச் செடிகளை வளர்த்து அதன் மூலம் இரண்டு மடங்கு வருமானம் ஈட்ட முடியும்” என அவர் தெரிவித்தார்.