நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. ’ஆப்ரேசன் டி 23’ என்ற பெயரில் புலியை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் பத்து நாட்களாக போராடி வருகின்றனர். இதனிடையே டி 23 புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிசாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் #saveT23 என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி வருகிறது.


இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ”டி 23 புலி, கிட்டத்தட்ட பதிமூன்று வயதான புலி. அதிலும் குறிப்பாக மிகுந்த காயம் ஏற்பட்டு, இயற்கையான முறையில் தனது உணவை தாமே தேடிக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு புலியானது காட்டுயிர்களை வேட்டையாட முடியாத நிலையில், எளிதாக கிடைக்க கூடிய வளர்ப்பு விலங்குகளை தேடி மனிதக் குடியிருப்புகளை நோக்கி வரும்.


இந்தச் சூழ்நிலையில் எதேச்சையாக மனிதர்களை வேட்டையாடும் நிலை ஏற்படும். மற்ற அனைத்து விலங்குகளையும் வேட்டையாடுவதையும் விட மனிதர்களை வேட்டையாடுவதென்பது எளிதிலும் எளிது. மனிதனை தின்னத் துவங்கிவிட்டால் அந்த வேட்டை செயல் முறையை அதற்கு பின்னர் அந்தப் புலி நிறுத்தவே நிறுத்தாது என்பதே உண்மை.




இந்த நிலையில் இதைப் பிடித்து வேறுகாடுகளுக்கு மாற்றினாலும் இந்தப் புலி இயற்கையான முறையில் வேட்டையாட முடியாத நிலையில் இருப்பதால் மீண்டும் மனித குடியிருப்புகளை நோக்கியே நகரும். மீண்டும் மீண்டும் புதுப் புது பிரச்சினைகள்தான் உருவாகத்தான் வாய்ப்புள்ளது. ஒன்றை நினைவு கொள்ளுங்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டு நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், மனிதர்களது ஒத்துழைப்பின்றி எந்த காட்டுயிகளையும் இன்றைய காலச் சூழ்நிலையில் காப்பது என்பது மிக மிக சிரமமான காரியம்.


பொதுவாக காடுகளில் இயற்கைச் சூழலில் புலிகளின் சராசரி ஆயுள்காலம் என்பது, பதினான்கு வயது அதற்கு மேல் அந்தப் புலிக்கு இயற்கையாகவே உடல் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நம்ம T23க்கு வயது பதிமூன்று அதுவும் மிகுந்த உடல்நலக் குறைவோடும் உள்ளது என்பதையும் மீண்டும் நினைவு கொள்வோம். இந்த நிலையில் இது ஆரோக்கியமாக இருந்தாலே ஆறு மாதமோ ஒரு வருடமோ தான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது மிக காயத்தோடு இருப்பதாக சொல்கிறார்கள். புலிகளுக்கு வயதாவதும் இறப்பதும் ஏன் எதேச்சையாக ஆட்திண்ணிகளாவதும் ஒரு இயல்பான நடைமுறைதான். இதனை தடுக்க ஒரு பொறுப்பான அரசும் வனத்துறையும் மனிதர்களது நலன் குறித்து சட்டப்படி இயங்குவதை நாம் அதீத உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அறிவியல் பூர்வமாக நோக்குவதே நல்லது.




மற்றபடி இந்தப் புலிகுறித்து பார்க்கும் போது இன்றைய மனிதர்கள் இதனைக் கொல்லக்கூடாது என்பதனை வலியுறுத்தி #saveT23 என்கிற ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி கொண்டிருப்பது என்பது மனிதர்களின் பொது புத்தியிலுள்ள கொடிய மிருக பட்டியலில் இருந்து புலி மெல்ல மெல்ல விலகி வருவது குறித்து மகிழ முடியாமலிருக்க முடியவில்லை. ஒரு உண்மை என்னவெனில், கடந்த இருநூறு இருநூற்றி ஐம்பது ஆண்டுகளில் நமது மலைக்காடுகளின் தன்மை வெகுவாக மாறியதோடு இனி மாற்றவே முடியாத சூழ்நிலையில் மாறிவிட்டதென்பதுதான் மிக கசப்பான நிலை. குடியேறி மனிதர்களால் கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்துவிட்டது காடு. இந்த புலி விசயத்திற்காக அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்கிற கருத்து இந்த இணைய வெளியில் பரவிக் கிடப்பதையும் அறிவோம். அது சாத்தியமான ஒன்றா என்கிற எதார்த்த நிலையினை அந்தப் பகுதியினை அறிந்தவர்களுக்கு தெரியும். எல்லாமே கைமீறிப் போய்விட்ட நிலையிலேயே இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.