அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக அவருக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசராக உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போன்று திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்து வரும் நிறுவனம் என கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.


கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 7  இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் கடந்த முறை சோதனை நடத்திய போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், தொழிலதிபருமான கோல்ட் வின்ஸ் பகுதியைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டது. இதே போல பந்தய சாலை பகுதியில் உள்ள அரவிந்த் என்பவரின் இல்லம், பீளமேடு ரங்கநாயகி நகரில் உள்ள ஒரு வீடு ஆகியவைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


இதனிடையே வருமான வரித்துறை அதிகாரிகள்  கடந்த மாதம் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து சீலை அகற்றினர். பின்னர் இந்த மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர். சீலை அகற்றுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர். சீல் அகற்றப்பட்ட பின்னரும் வீடுகளில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் பரபரப்பு நிலவி வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண