கோவையில் அதிமுக மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, ”அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலினை இறக்கவே இந்த மாநாடு நடைபெறுகிறது. மு.க. அழகிரி அதிமுக இனிமேல் கிடையாது. அழிக்க போறோம் என்று கூறினார். எம்.ஜி.ஆர். துவக்கிய கட்சியை அழிக்க முடியாது. தற்போது  பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் அதிகமான திட்டங்களை வழங்கியவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தான்.


அரசாங்க பணத்தை எடுத்து குடும்பமாக செம்மொழி மாநாட்டை நடத்தி கோவையை திமுக அழித்து சென்றார்கள். அதனை கண்டித்து 2010ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் மிகப்பெரிய ஆர்பாட்டமும், கோவையை தொடர்ந்து, திருச்சி, மதுரையில் நடந்த ஆர்பாட்டமே கோட்டைக்கு ஜெயலலிதா சென்றதற்கு காரணம். அதுபோன்று இப்போது மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. மதுரை மாநாடு முடிந்து எடப்பாடி கோட்டைக்கு செல்லும் சூழல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். அதிமுக ஆட்சியில் 20,000 போராட்டங்கள்  நடத்தி திமுகவின் சித்து வேலைகள் செய்தது.  முறைகேடு செய்து ஆட்சிக்கு வந்தார்கள்.


முதல்வர் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியவில்லை. அவர் எதையும் செய்வதில்லை. ஓராண்டில் 30,000 கோடி ஊழல் நடந்ததாக அக்கட்சியின் நிதி அமைச்சராக இருந்தவர் சொன்னார். அதிமுக சென்னையை விட கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்தது. மெட்ரோ ரயில் திட்டம் கூட அதிமுக அறிவித்தது தான். கோவை மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை வழங்கியது அதிமுக அரசு. நியாயத்திற்கு புறம்பாக காவல்துறை அதிமுக மீது பொய் வழக்குபதிவு செய்கிறது.  எப்போது வேண்டுமானாலும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.


ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி மருத்துவ மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு உட்பட  எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தவர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவம் படிப்பதற்கு எடப்பாடி தான் காரணம். நீட் கொண்டு வந்தது திமுக தான். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து என்றார்கள். ஆனால் மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். எடப்பாடியாருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மதுரை மாநாட்டிற்கு போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, ”கோவை மாவட்ட அதிமுக சார்பாக ஒரு லட்சம் பேர் மதுரை மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். சில மாவட்டங்களுக்கு  சென்ற போது, எழுச்சியை பார்த்தால் திமுக ஆட்சி போதும். எடப்பாடி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். எந்த திட்டம் பார்த்தாலும் அதிமுக அறிவித்தது தான். 2.5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. மதுரை மாநாட்டிற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் அதிமுக வெல்லும். திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் செயலிழந்து முடங்கி உள்ளது. ஆட்சி மாற்றம் தான் அனைத்திற்கும் தீர்வு” என்றார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்