கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க சென்னை உயர்நீதிமன்றம், காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபான பாட்டில்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில் வாங்கி பயன்படுத்திய பின்னர், காலி மது பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் பாட்டில்களை பொது இடங்களில் வீசாமல் இருக்கவும், சுற்று சூழல் காக்கவும் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வந்த நிலையில், இதை பிற மாவட்டங்களிலும் அமல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இதனையடுத்து கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஓட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மதுபான பாட்டில்களை, டாஸ்மாக் மதுபான கடைகளில் ஓப்படைத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்பட்டு வருகிறது. அதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஓட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாய் பணத்தை மதுப்பிரியர்கள் திரும்ப பெற்றுக் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் வடக்கு கோட்டத்தில் 166 டாஸ்மாக் கடைகளும், தெற்கு கோட்டத்தில் 139 டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 305 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்திலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்