கோவை காந்திபுரம், சோமனூர் வழித்தடத்தில் பேருந்து ஓட்டுநராக உள்ள ஷர்மிளா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டும் ஷர்மிளா ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். பேருந்தை கடந்து வருவோரும், போவோரும் ஒரு நிமிடம் நின்று ஆச்சரியத்தோடு பார்த்து, ஷர்மிளாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டுத் தான் நகர்கின்றனர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகி விட்ட ஷர்மிளாவுடன் பலர் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.




கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. சிறு வயதில் இருந்தே வாகனங்கள் ஓட்டுவதில் ஆர்வம் இருந்த இவருக்கு, ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மகேஷ் ஊக்கம் அளித்து வாகனங்கள் ஓட்ட கற்றுத் தந்தார். பின்னர் தனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப் பார்த்த ஷர்மிளா, தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கிறார். பின்னர் ஆட்டோ ஓட்டுநராக ஷர்மிளா பணி புரிந்து வந்தார். இதனிடையே பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாக கொண்ட ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றுள்ளார். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என நினைத்த ஷர்மிளாவிற்கு, குடும்பத்தினர் ஆதரவு கிடைத்தது. பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்த போது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி களத்தில் இறங்கிவிட்டார் ஷர்மிளா. 




இதுகுறித்து பேசிய ஷர்மிளா, ”எந்த துறையாக இருந்தாலும், ஒருபடி மேலாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனது அப்பா ஆட்டோ ஓட்டி வருகிறார். நான் பேருந்து ஓட்ட வேண்டுமென ஆசைப்பட்டேன். இதற்காக கனரக வாகனம் ஓட்டி பழகி ஓட்டுநர் உரிமம் பெற்று 6 மாதங்களாகியுள்ளது. ஆரம்பத்தில் சின்ன பெண்ணாக இருப்பதாக கூறி, பேருந்து ஓட்ட யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நேற்று முதல் நாள் பேருந்து ஓட்டினேன். பேருந்து ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்களுக்கு இணையாக பேருந்தை இயக்கி காட்டுவேன்” எனத் தெரிவித்தார். பேருந்து ஓட்டுநராக களமிறங்கியுள்ள ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண