தமிழ்நாட்டில் முதல் முறையாக மேட்டுப்பாளையத்தில் யானைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் ’வேழம் இயலியல் பூங்கா’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.




கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் எல்லைப்பகுதியாக மேட்டுப்பாளையம் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதி வன விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது.




புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் இருந்தாலும், யானைகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இதனால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் வலசை செல்வது வழக்கம்.




வலலைப் பாதையில் ஏற்படும் இடையூறுகளால் திசை மாறும் யானைகள் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அதேபோல உணவு மற்றும் தண்ணீர் தேடியும் யானைகள் கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் யானை மனித மோதல்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. யானைகள் மீது சிலர் கற்கள், தீப்பந்தங்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வீடு தாக்குவது, சட்டவிரோதமாக நேரடி மின்சாரம் பாய்ச்சப்பட்ட மின் கம்பி வேலிகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களால் யானைகள் உயிரிழக்க நேரிடுகிறது.




கோவை வன மண்டலம் அதிக மனித யானை மோதல் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது. இதனால் யானை மற்றும் மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. யானைகள் மீது பலருக்கு பிரியம் இருக்கும் அதேவேளையில், பலருக்கும் வெறுப்புகள் இருக்கின்றன. 




யானைகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவும், யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் ’வேழம் இயலியல் பூங்கா’ அமைத்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கு வளாகத்தில் இப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. வனம் மற்றும் சூற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம், அவற்றின் வாழ்வியல் முறை, குணாதிசயங்கள் போன்றவற்றை விளக்க விழிப்புணர்வு மையம் மற்றும் திறந்தவெளி பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. உலகில் வாழ்ந்த யானை இனங்கள், கால சூழலில் அழிந்து போன யானை இனங்கள், வாழ்த்த காலங்கள்,  சங்க இலக்கியம் மற்றும் காலாச்சாரத்தில் யானைகளின் பங்கு போன்றவற்றை விளக்கும் சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், அரிய புகைப்படங்கள் இந்த பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.




இம்மையத்திற்கு வெளியே பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட உள்ளது. வனத்தை ஒட்டிய பகுதியில் இப்பூங்கா அமைக்கப்பட்டு வரும் இடத்தில் இருந்து சுமார் முன்னூறு மீட்டர் தூரத்தில் யானைகள் தாகம் தீர்க்க வனத்துறை கட்டியுள்ள தண்ணீர் தொட்டிகள் உள்ளது. பூங்காவை பார்வையிட வரும் பொது மக்கள் நேரிடையாக நீர் அருந்த வரும் யானைகளை பாதுகாப்பான இடத்தில் இருந்து காணும் வாய்ப்பும் கிடைக்கலாம்.




இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ”யானையை குறிப்பிடும் வேழம் என்ற தமிழ் சொல்லில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையம் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பொழுதுபோக்கு இடமாக அமையும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததும் விரைவில் திறக்கப்படும்” என தெரிவித்தனர்.


இந்தப் பூங்கா யானைக் காதலர்களிடமும், பொது மக்களிடையேயும் வரவேற்பை பெறும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.