கோவையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 2 ஆயிரத்து 400 க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் மீண்டும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. சென்னையை விட கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாவட்டமாக கோவை மாறிப்போனது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரத்து 400 க்கும் கீழ் குறைந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று 2 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 2 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட 120 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 24 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றும் கொரோனா தொற்று பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று 4992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 702 பேராக உயர்ந்துள்ளது.
அதேசமயம் மீண்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 44 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1638 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இது மற்ற மாவட்டங்களை விட அதிகமானதாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள், குணமடைந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் என அனைத்திலும் கோவை முதலிடம் பிடித்துள்ளது.
இதேபோல இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1405 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். 1953 பேர் குணமடைந்துள்ள நிலையில், 13 ஆயிரத்து 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 70 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 482 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 913 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர். 1511 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், 583 பேர் குணமடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.