நீலகிரி மாவட்டம் உதகை அரசுக் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கோவை மாவட்ட கல்வி இயக்க துணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள், ஏழை எளிய, விவசாயிகள் மற்றும் தேயிலைத் தோட்ட குழந்தைகளாக உள்ளனர். தற்போது சமவெளிப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து பயின்று வருகின்றனர். இவர்கள் விடுதிகளில் தங்கி பயில வேண்டிய நிலை உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரி உள்ளது. தனியார் கல்லூரிகள் எதுவும் இல்லை. இதனால் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த இரண்டு கல்லூரிகளிலேயே சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், இந்த கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பணம் உள்ள பிரவுன் கவரை வழங்குகிறார். அப்போது மாணவரை பார்த்து, “சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போதுதான் இடம் கிடைக்கும்” எனக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சில பேராசிரியர்கள் ஏற்கனவே லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மாணவர்கள் விரும்பிய துறைக்கு மாற்றி தருவதற்காக பேராசிரியர் ரவி என்பவர் மாணவர்களிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கலைக் கல்லூரி முதல்வரே விடுதி ஒதுக்கீடு செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்டக் கல்வி இயக்கக துணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.