கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஒட ஓட விரட்டுவோம். அதிமுக கூட்டணி தான் பலமான கூட்டணி என்பதை கடந்த 10 நாட்களாக காண்பித்து வருகிறோம். எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். மு.க ஸ்டாலினுக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. கோவை அதிமுகவின் இரும்பு கோட்டை. இதில் யாரும் நுழைய முடியாது. அதிமுக 10க்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மாவட்டம் இது. இங்கு சரித்திர வெற்றி பெற வேண்டும். அதிமுக வெற்றி குறித்து பலரும் பலவகையாக பேசி வருகிறார்கள்.
திமுக கொள்ளை அடிக்கும் கட்சி
ஸ்டாலின் கண்ட கனவு வேறு. கூட்டணி பலமாக இருக்கு வெற்றி பெறலாம் என பகல் கனவு காண்கிறார். மக்கள் அதிமுக பக்கம் உள்ளனர். மக்கள் பலத்தினால் வெற்றி பெற முடியும். நாங்கள் தான் வெற்றி பெறுவோம். உழைப்பு, உழைப்பு தான் இந்த கூட்டணியில் உள்ளது. முதல்வரிடம் பதவிக்கு தகுந்த பேச்சு இல்லை. நாகரிகம் தெரியா மனிதர் ஸ்டாலின். கிராமத்தில் இருந்து வந்தவன் நான். ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை, இல்லை என்றால் என்னுடைய தொண்டன் கூட பேசுவான். அதிமுகவில் அனைவரும் சமம். இலட்சியம் உள்ள இயக்கம் அதிமுக. திமுக போன்று கொள்ளை அடிக்கும் கட்சி இல்லை. மக்களுக்காக உழைத்தவர் ஜெயலலிதா. அவருடைய உடல் நலத்தை கூட கண்டு கொள்ளமால் மக்களுக்காக வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்கள் உருவாக்கிய கட்சி.
முதல்வருக்கு தெம்பு, திராணி உள்ளதா? அப்படி இருந்தால் கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் சொல்ல முடியுமா? கோவையிலிருந்து சொல்கிறேன். உங்கள் சாதனை மேடை போட்டு பேசுங்கள், நானே நேரில் வந்து பேசுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் செய்த திட்டங்களை நான் பேசுகிறேன். ஆனால் எங்கள் மீது பொய் பரப்புரை வேண்டாம். அதிமுக பாஜகவை பார்த்து பயப்புடுவதாக ஸ்டாலின் சொல்லுகிறார்.
இந்தியாவில் எந்த கட்சிக்கும் பயப்படாத கட்சி அதிமுக. மடியில் கணம் இல்லை, வழியில் பயமில்லை. யாருக்கும் அடிமை இல்லை நாங்கள். அதிமுக தொண்டன் யாருக்கும் பயப்பட மாட்டான். இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. பிரதமரை பார்த்து சரணகதி அடைந்தவர்கள். பிரதமரை அழைத்து பல திட்டங்களை தொடங்கி வைக்க என்ன காரணம்? நீங்களா மோடியை எதிர்க்கிறீர்கள்? காவேரி நதி நீர் பிரச்சனையில் நாடாளுமன்றத்தை 22 நாள் முடக்கி வைத்தோம், நாடே திரும்பி பார்த்தது. எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்கள் அதிமுக.
கச்சத்தீவை மீட்போம்
நாங்களே கூட்டணியில் இருந்து வெளிய வந்துட்டோம். எதற்கு கள்ள கூட்டணி என்று பேசி வருகிறீர்கள்? உங்களுக்கு பயம் வந்துவிட்டது. நீங்கள் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்களா? எங்கள் கட்சியை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்? கச்சத் தீவை மீட்டும் திறன் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. 10 ஆண்டு காலமாக எதும் செய்யவில்லை. இப்போது பேசி வருகிறார்கள். கச்சத் தீவை மீட்க தொடர்ந்து பேசி வரும் கட்சி அதிமுக தான். மீனவர்கள் மீதும், தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் அபிடவெட் போடுங்கள். நீதிமன்றம் மூலம் கச்சத் தீவை நாம் மீட்க முடியும். மீனவ மக்களின் வாக்கு தேவை என்பதால் இப்போது பேசி வருகிறார்கள். மீனவ மக்களுக்கு எப்போதும் அதிமுக ஆதரவு அளித்து வருகிறது.
மூன்று நாளைக்கு ஒருமுறை அதிமுக தண்ணீர் கொடுத்தது. ஆனால் தற்போது 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்து வருகிறார்கள். தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. திமுக பல்வேறு துறையில் ஊழல் செய்துள்ளனர். ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகம் இப்போது உயிரோடு இருந்தால் மயங்கி விழுந்துருவார். ஆன்லைன் ரம்மி நிர்வாகத்திடம் தேர்தல் பத்திரம் முலம் பணம் வாங்கிய கட்சி திமுக. 10 ரூபாய் பாலாஜி பாதுகாப்பாக உள்ளே இருக்கிறார். இல்லையென்றால் மாவட்டம் விளங்காமல் போயிருக்கும். நல்லவராக ஸ்டாலின் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து கொடுத்து நடித்து கொண்டு இருந்தார். போதை பொருள் அமோகமாக விற்பனை நடக்கிறது. போதை பொருள் விவகாரத்தில் பெரிய அளவில் கைது இருக்கும் என பேசி வருகிறார்கள். அது தேர்தலுக்கு முன்னா? பின்னா என தெரியவில்லை. பில்லூர் குடிநீர் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி உதயநிதி திறந்து வைத்துள்ளார். சாதிக்கும் மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாட்டை காப்போம்” எனத் தெரிவித்தார்.