நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர் வீடு வீடாக கூட்டணி கட்சியினர் உடன் இணைந்து சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சாய்பாபாகாலனி, என்எஸ்ஆர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து கணபதி ராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், ”வரக்கூடிய தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தல். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்டு வருகின்றோம். திராவிட முன்னேற்ற கழகம் போகும் இடங்களெல்லாம் அந்த திட்டங்கள் அறிகுறி மக்கள் கொடுக்கும் வரவேற்பிலிருந்து தெரிகிறது. பெண்களுக்கான உரிமை தொகை, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை


எதிர்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிலிண்டர் 500 ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு 1100 ரூபாயில் இருக்கிறது. பெட்ரோல் விலை கட்டுக்கடகாமல் போய்க்கொண்டிருக்கிறது. 100 ரூபாய்கு மேல் உள்ளது. அதற்கு மேலும் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொருத்தர் கணக்கிலும் 15 லட்சம் வரும் என்று சொன்னார்கள், வந்ததா? பொதுமக்கள் நீங்கள் இதை கேட்க வேண்டும். நாங்கள் தலை நிமிர்த்தி வாக்குகளை கேட்போம், ஏனென்று கேட்டால், அறிவித்த திட்டங்கள் அறிவிக்காமலும், பல திட்டங்களை இன்றைக்கு  முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.




பிரதமர் வேட்பாளர்


கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் பொழுதும், மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. இந்திய கூட்டணியில் எங்களை கேட்டால், நாளைய பிரதமர், நாளை ஆட்சி மாற்றம் நடக்கும் பொழுது ராகுல் காந்தி தான் பிரதம மந்திரி என்று நாங்கள் சொல்லுவோம். ஆனால், அதிமுகவினருக்கு அது கிடையாது. இன்றைக்கு தனித்து நிற்பது போல் இருக்கிறது. நாளை, அதிமுக பிஜேபிக்கு எப்பொழுதும் அந்த ஆதரவு கொடுப்பார்கள். இதை பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால், நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த விலைவாசி பிரச்சனை, கேஸ் பிரச்சனை, இந்த ஜிஎஸ்டி பிரச்சனை, எல்லாம் நமது வெற்றியை தேடி தர வேண்டும்" என தெரிவித்தார்.


அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாலர் கார்த்திகேயன், பொள்ளாச்சி நகராட்சி 27 வது வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "பொள்ளாச்சி 36 வார்டு கொண்ட பகுதியாகும். இங்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் சாலை வசதி போன்றவை மேம்படுத்தப்படும். நான் வெற்றி பெற்றவுடன் பொள்ளாச்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும். ஆளும் திமுக அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் விதமாக சொத்து வரி, குடிநீர் வரி மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை ஏற்றம் செய்துள்ளது. தற்போது திமுக வெற்றி பெற்றால் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் கேஸ் ரூபாய் 500 க்கு தரப்படும் என கூறி திமுக ஏமாற்றுகிறது. பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.