கடந்த 17ஆம் தேதி மறைந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.


கர்நாடக அரசும் மேகதாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. இதேபோல ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டது. நடந்து முடிந்த நாடாமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்குகளை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.




எஸ்.பி. வேலுமணி பேட்டி


அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை  தீர்க்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். அதிமுக தொடங்கிய பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல், திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. இதனால் கொங்கு பகுதியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டுள்ள. மக்களுக்கு துதேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுகின்றனர்.


அதிமுகவின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள் வெளியிடுவதை கண்டிக்கிறோம். கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார். கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.