சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மன அழுத்தம் காரணமாக காரமடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் காரமடை பெள்ளாதி ரோடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது இரண்டாவது மகள் ரம்யா. இவர் சென்னையில் தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருமுல்லைவாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.  ஜ.டி ஊழியரான இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் ஏழு மாத கைக் குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அருகில் தவறி விழுந்து தத்தளித்த நிலையில் அருகில் இருந்தவர்கள் போராடி பத்திரமாக மீட்டனர்.  இந்த சம்பவம் நடந்தது குறித்து பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவியது. அதில் தாய் ரம்யா குறித்து மிக மோசமான நிலையில் கருத்து தெரிவித்து பலரும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கள் ரம்யாவிற்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துள்ளார்.


தூக்கிட்டு தற்கொலை


இருப்பினும் அதில் இருந்த மீண்டு வராமல் மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டு ரம்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சென்னையில் இருந்து ரம்யா தனது சொந்த ஊரான காரமடையில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். இங்கு தங்கி இருந்த நிலையில் ரம்யாவின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஒரு நிகழ்ச்சிக்கு வெளியே சென்ற நேரத்தில், மன அழுத்தத்தில் இருந்த ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வெளியில் சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்துபோது ரம்யா தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)