கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இதனிடையே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகார் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2016 முதல் 2018 ம் ஆண்டு வரை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பொழுது தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ஒப்பந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு புகார் அளித்து இருந்தார். எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதன் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் 4 இடங்கள், புறநகர் பகுதிகளில் 6 இடங்கள் என 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் அலுவலகம், சபரி எலக்ட்ரிகல்ஸ், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இதேபோல புறநகரில் நமது நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் இல்லம், ஏஸ் டெக் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இல்லம் சி.ஆர். கன்ஸ்ட்ராக்ஸ்சன்ஸ் நிறுவனம், ஏஸ் டெக் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லத்தில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டில் முன்பாக குவிந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர். ஜெயராமன் ஆகிய 7 சட்டமன்ற உறுப்பினர்கள் திரண்டனர். அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் இல்லம் முன்பாக குவிவதை தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். லேசான தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிய அனுமதி மறுத்த காவல் துறையினர், அங்கு திரண்டிருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அப்போது அதிமுக தொண்டர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் காவல துறையினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 7 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்