கோவையில் சுங்கத்துறை அதிகாரி எனக்கூறி மனைவியின் உதவியுடன் நகை பணத்திற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவனையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் ராமு என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமு திருமண தகவல் மையத்தின் மூலம் 31 வயது பெண்ணின் கைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதில், தான் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்தப்பெண்ணிடம் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம், உங்களுக்கு என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்டுள்ளார்.
போனில் மறுமுனையில் இருந்த பெண்ணும், தனக்கும் திருமணமான ஒருசில மாதங்களிலேயே கணவர் பிரிந்துவிட்டார். யாரும் இல்லாமல் தற்போது தனிமையில் இருக்கிறேன். உங்களை எனக்கு பிடித்திருக்கிறது. ஆகையால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 2 பேரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்காக இருவரும் ஒன்றாக சென்று ரூ. 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடைகளை எடுத்துள்ளனர். அதற்கான பணத்தினை அந்தபெண் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தபெண் நிறைய பணம் அவரது வங்கி கணக்கில் இருப்பதை அறிந்துகொண்ட ராமு ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி, தனக்கு அவரசமாக 25 ஆயிரம் ரூபாய் தேவை படுகிறது என்றும், உடனடியாக தனது முன்னாள் மனைவிக்கு அந்த தொகையை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்தப்பெண்ணும் அவரது முன்னாள் மனைவியின் வங்கி கணக்கிற்கு 25 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய சிறிது நேரத்தில் ஷாப்பிங் சென்ற இடத்தில் இருந்த ராமு, நீண்ட நேரமாக யாருடனோ பேசிக் கொண்டுள்ளார். அந்த பெண் யாரிடம் இவ்வளவு நேரம் பேசுறீங்க என்று கேட்டதற்கு தனது முன்னாள் மனைவி லட்சுமி பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளார். அதில் பேசிய ராமுவின் மனைவி லட்சுமி, திருமண வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இனி நான் ராமுவை போனில் தொடர்பு கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
ராமுவின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அந்தப் பெண் ராமுவை அனுப்பிவிட்டு, அவரை ரகசியமாக பின்தொடர்ந்துள்ளார். இதில் தனக்கு யாரும் இல்லை என கூறிவந்த ராமுக்கு லட்சுமி என்ற மனைவியும் குழந்தைகள் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமு, சுங்கத்துறை அதிகாரி இல்லை என்றும், மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார் என்றும் தெரிய வந்தது.
மேலும், ராமுவின் இந்த செயலுக்கு மனைவி லட்சுமி உடந்தையாக இருந்துள்ளார். இதற்கு முன்பு சில பெண்களை இருவரும் சேர்ந்து பணம் நகை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ராமு மீது ஏற்கனவே சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் ராமு மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுங்க இலாகா அடையாள அட்டை, ஆடைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.