கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை நகரில் உள்ள காவல் துறையினருடன் வெளி மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் பாதுகாப்பிற்காக கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1,700 காவலர்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இது தவிர சிறப்பு காவல் படையினர் 100 பேர், தமிழ்நாடு காமாண்டோ போலீசார் 58 பேர், அதிவிரைவுப் படையினர் 200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், திடீரென வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் நடத்திய சோதனையில் கார் டயர் வெடித்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதி கூட்டமும் போடப்பட்டது.
இதனிடையே கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பார்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையரான முருகவேல் கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது முருகவேல் கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த பார்த்திபன், கோவை மாநகர உளவு பிரிவு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்த அருண், கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்.
இதனுடைய கோவை மாநகர் மற்றும் மட்டும் இன்றி புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பத்ரி நாராயணன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவையில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.