கோவையில் பல்வேறு இடங்களில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
புதிய உளவுப்பிரிவு உதவி ஆணையர் நியமனம்
உளவுப்பிரிவு உதவி ஆணையர் பொறுப்பை கவனித்த முருகவேல் ஏற்கெனவே பதவு உயர்வு பெற்றுச் சென்றுள்ளார். முருகவேல் பதவி உயர்வு பெற்றுச் சென்றதால் உளவுப் பிரிவு உதவி ஆணையர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையர் பார்த்திபன், உளவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்காநல்லூர் சரக உதவி ஆணையர் அருண், சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் பதட்டம்
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபா காலனி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
தீவிர பாதுகாப்பு பணியில் காவலர்கள்
இந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை
முன்னதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதிக் கூட்டமும் போடப்பட்டது.
பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது