தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்தது. பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. மதிய நேரத்திற்கு பின்னர் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கோவை மாவட்டத்தில் நேற்று 1076 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மாக்கினாம்பட்டி பகுதியில் 8.2 செ.மீ. மழையும், மேட்டுப்பாளையம் பகுதியில் 6.45 செ.மீ. மழையும், சின்னக்கல்லார் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் 5.6 செ.மீ. மழையும், வால்பாறையில் 5.5 செ.மீ. மழையும், கோவை தெற்கு பகுதியில் 5.4 செ.மீ. மழையும், பதிவாகியுள்ளது.


தொடர் மழை காரணமாக நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி சாலை இரயில்வே மேம்பாலம், கிக்கானி பள்ளி இரயில்வே பாலம் ஆகிய பகுதிகளில் பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிவேக திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தி மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதனால் வெள்ள நீர் வடிந்ததால் போக்குவரத்து சீரானது. இந்நிலையில் தொடர் மழையால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோயாளிகளும், உறவினர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.




இதனிடையே கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




இந்நிலையில் தொடர் மழை காரணமாக நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ராஜ வாய்க்கால் தடுப்பணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் உள்ள 8 குளங்களிலும் நீர் நிறைந்துள்ள நிலையில் நொய்யல் ஆற்று வழியாக செங்குளம் வந்து அங்கிருந்து ராஜ வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்துக்கு நீர் செல்லும் தடுப்பணையும் திறந்து விடப்பட்டது. இதனால் வழக்கமான அளவை விட ராஜா வாய்க்காலில் கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ராஜவாய்க்காலில் இருந்த குப்பை கூளங்களை அகற்றியதால் இடையூறு இன்றி நீர் வெளியேறி வருகிறது. ராஜவாய்காலில் நீர் திறப்பட்டதால் புட்டுவிக்கி தடுப்பணையிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண