தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது.  இதேபோல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மாலை முதல் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இன்று 208.40 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் பகுதியில் 2.6 செ.மீ. மழையும், கோவை தெற்கு பகுதியில் 2.3 செ.மீ. மழையும், பில்லூர் அணை பகுதியில் 1.8 செ.மீ. மழையும், பெரியநாய்க்கன்பாளையம் பகுதியில் 1.7 செ.மீ. மழையும், அன்னூர் பகுதியில் 1.46 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி சாலை இரயில்வே மேம்பாலம், கிக்கானி பள்ளி இரயில்வே பாலம் ஆகிய பகுதிகளில் பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிவேக திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தி மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெள்ள நீர் தேங்கிய அவிநாசி சாலை மேம்பாலம், கிக்கானி பாலம் ஆகிய இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை நீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.




இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ரெட் அலார்டு கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் திரும்ப பெறப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.