நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வந்தது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. டி 23 புலி 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மக்களை அச்சுறுத்தி வந்த டி 23 புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் பணிகள் ஆப்ரேசன் டி 23 என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 




21 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் கடந்த அக்டோபர் 15 ம் தேதி நீலகிரி மாவட்ட வனத்துறையினர், மாயார் அருகே கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய புலி, முதல் முறையாக  உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. டி 23 புலி 13 வயதான புலி என்பதால் வனத்தில் இடத்தை பிடிக்கும் போட்டியில்  இளம்புலிகள் இந்த புலியை தாக்கி இருக்கின்றது எனவும், அதனால் புலியின்  உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது எனவும் வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து டி 23 புலி மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறிய நிலையில் அந்த பூங்காவில் உள்ள கூண்டில், டி 23 புலி தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 




இந்த நிலையில் டி 23 புலியை பிடிக்க செய்த செலவினம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தை சேர்ந்த சதீஷ் என்ற வழக்கறிஞர் தகவல் கோரியிருந்தார். இதற்கு முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அலுவலகம் பதலளித்துள்ளது. அதன்படி டி 23 புலியை பிடிக்கும் பணிகளுக்காக வனத்துறை மூலம் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரை 21 நாட்களில் மொத்தம் 11 லட்சத்து 34 ஆயிரத்து 105 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உதகை துணை இயக்குநர் மூலம் 4 இலட்சத்து 62 ஆயிரத்து 328 ரூபாயும், மசினகுடி துணை இயக்குநர் மூலம் 6 இலட்சத்து 71 ஆயிரத்து 777 ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொகை டி23  புலியை பிடிக்க மற்றும் பராமரிக்க வைத்து இரும்பு கூண்டுகள் வைத்தல், அவற்றை தினமும் இடம் மாற்றி வைத்தலுக்கான வாகன வாடகை, உபகரணங்கள் வாங்கியது, மருந்துகள் வாங்கியது, கூடலூர் ஊட்டி மற்றும் மசினகுடி கோட்ட பணியாளர்கள், மருத்துவக் குழு, தன்னார்வ தொண்டு பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு தினமும் உணவு, தண்ணீர் மற்றும் தேநீர் வழங்கியது உள்ளிட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.