கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டார். கோவை மாவட்டத்திற்கு முத்துசாமி பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், நடந்த முதல் முறையாக நடந்த கட்சி நிகழ்ச்சி என்பதால் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக நிர்வாகிகள், “ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர் முத்துசாமி வெற்றி தேடித்தந்ததுபோல, கோவையில் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி தேடி தருவார். திமுக நிர்வாகிகளை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. அதிகாரிகள் கட்சியினரை மதிக்கும் நிலை ஏற்படுத்த வேண்டும். ஒன்றுபட்டு தேர்தலில் வெற்றியை தேடித்தர தயாராக இருக்கிறோம்.


வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கட்சி நிர்வாகிகளையும், முதலமைச்சரையும் இழிவாக பேசிய விவகாரத்தில், மெளனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு எதிராக பேச வேண்டும். எதிர்கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர்கள் செந்தில் பாலாஜியை குறிவைக்கவில்லை. திமுகவை தான் குறிவைத்துள்ளார்கள். பாஜக டெபாசிட் இழக்கும் அளவிற்கு தேர்தல் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தனர்.




இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “செந்தில் பாலாஜி மிக‌ அருமையாக திட்டமிட்டு பணியாற்றி கொண்டிருந்தார். அவரது பணி தனித்தன்மையுடன் இருந்தது.ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் மட்டுமே முழு காரணம் அல்ல. அத்தேர்தலில் கோவை திமுகவினர் வெற்றிக்காக அருமையாக பணியாற்றினார்கள். செந்தில் பாலாஜி வகுத்த பாதையில் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் செல்வேன். செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது. இதற்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வரும். கட்சி, ஆட்சி பணிகளை செய்து வரும் முதலமைச்சருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.


பிரச்சனைகளை தீர்க்க அனைவரும் இணைந்து முழுமையாக நடவடிக்கை எடுப்போம். நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். ஆயிரம் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஒரு கட்சியில் ஒரே கருத்து இருந்தால் கட்சி வளராது. போட்டி இருக்கும் போது தான் கட்சி வளரும். ஆனால் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தருவீர்கள் என நம்புகிறேன். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக கடுமையான பாடுபட வேண்டும்.நமது ப்ளஸ்களை மட்டும் பெருமையாக பேசிக் கொண்டிருக்க கூடாது. மைனஸாக இருப்பதை நினைத்து அதை நோக்கி செல்ல வேண்டும். கொங்கு மண்டலம் சரியாக இல்லை என பெயரை ஏற்படுத்தியுள்ளார்கள். அதனை உள்ளாட்சி தேர்தலில் செந்தில்பாலாஜி உடன் இணைந்து முறியடித்து உள்ளீர்கள். அது தொடர வேண்டும். பாஜக, அதிமுக தலைமையை ஏற்படுத்தி கொண்டு போட்டிக்கு வர வேண்டும்.


திமுகவினருக்கு அரசு அதிகாரிகள் மரியாதை தர வேண்டும் என பேசினார்கள். திமுகவினர் பொது வேலைக்காரர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் முன்பு நிற்பார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக நிற்க மாட்டார்கள். அவர்களை ஏளனப்படுத்தாமல் முறையாக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். நீங்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் என்னென்ன பிரச்சனைகள் இருப்பதை பட்டியலிட்டு வேலை செய்ய வேண்டும்.கட்சி வளர்ச்சி என்பதை நிரந்தரமாக இருக்க செய்ய வேண்டும். அடிமட்ட தொண்டர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்ற தேர்தல் எளிதாக இருக்கும். அதன்பிறகு மற்ற கட்சிகளை தேட வேண்டிய நிலை இருக்கும். கோவைக்கு இடைக்கால பணியாக தான் வந்துள்ளேன். போஸ்டர்களில் எனது படத்தை பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.