கோவை உப்பிலிபாளையம் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். முதல் பணியாக மக்களுக்கான அரசு செய்யும் திட்டங்களை செயல்படுத்தவும், அன்றாட பிரச்சனைகளை தீர்க்கவும் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.


கட்சிகளை பணிகளை பொறுத்தவரை சிறப்பாக நடந்து கொண்டுள்ளது. செந்தில் பாலாஜி கட்சியிலும், ஆட்சி பணிகளிலும் சரியான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த அவர் வழிவகை செய்துள்ளார். அப்பணிகள் சரிவு இல்லாமல் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. திமுகவினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையவும், தடையில்லாமல் வளர்ச்சிப் பணிகள் நடக்கவும் ஏற்பாடு செய்வோம். மாவட்டம் முழுவதும் அனைத்து பணிகள் விரைவுபடுத்தப்படும்.




டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கக்கூடாது என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் கூடுதலாக வாங்குவது பெரும்பகுதியான இடங்களில் தடுக்கப்பட்டுள்ளது. இரண்டொரு இடங்களில் கூடுதலாக பணம் வாங்குவது உள்ளது. அதனை வைத்து அனைத்து இடங்களிலும் வாங்குவதாக சொல்லக்கூடாது. கூடுதலாக பணம் வாங்குவதை முழுமையாக ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. வாடகை பிரச்சனை, பாட்டில் சேதம், மின்கட்டணம் போன்ற தொழிலாளர்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து, இத்தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாட்டில்கள் விளைநிலங்களில் வீசப்படுவதை தடுக்க வேறொரு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த கால அவகாசம் தேவை.


பருவமழை முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. கழிவு பஞ்சு நூற்பாலைகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிருக்கான ஆயிரம் ரூபாய் பெற சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளில் எதுவும் தவறு என சொல்ல முடியாது. அதில் தவறு இருந்தால் மாற்றம் செய்யவும் முதலமைச்சர் தயாராக உள்ளார். இதில் தவறு இருப்பதாக பொதுவாக திமுக, பாஜகவினர் சொல்வது அரசியல். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை ஆயுதமாக பயன்படுத்த திமுக நினைக்கவில்லை. அதனை சட்டபூர்வமாக சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களால் பாஜக, ஒன்றிய அரசு திமுக வெற்றியை சீர்குலைக்க நினைத்தால், இரண்டு மடங்கு வெற்றியை கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண