நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Continues below advertisement

கோவை மாநகராட்சி தேர்தல்

கோவை மாநகராட்சியில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது. இதில் 45 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கான பெண்களுக்கும், பட்டியலின பெண்களுக்கு 5 வார்டுகளும் என மொத்தம் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 5 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்ய 20 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 5 வார்டுகளுக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் என 20 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 4 முறை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை அதிமுகவும் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. மேயர் பதவியை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கே வழங்கியுள்ளது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்புடன் திமுக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

திமுக கூட்டணி நிலவரம்

கடந்த மாநகராட்சி தேர்தல்களில் மேயர் பதவியை பெற்ற காங்கிரஸ் கட்சி, இந்த முறையும் அப்பதவியை பெற ஆர்வம் காட்டி வருகிறது. கோவையில் கணிசமான வாக்கு வங்கியையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேயர் பதவியை பெற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் கடந்த சட்ட மன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியதால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை ஒதுக்காமல், அப்பதவியை பெற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதனால் 5 மாவட்ட செயலாளர்கள் இருந்த போதும், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்துள்ளது. கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் திமுகவினர் வேலை செய்து வருகின்றனர்.

அதிமுக கூட்டணி நிலவரம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக கூட்டணி, கோவையை பொறுத்தவரை வலுவாக உள்ளது. இந்த முறையும் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதோடு, கோவை மாநகர பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாஜக மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதேசமயம் பாஜகவிற்கு மேயர் பதவி வழங்கக்கூடாது என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு கட்சிகளும் மேயர் பதவியை பெற ஆர்வம் காட்டி வரும் நிலையில், தேர்தல் வெற்றியை பொறுத்து பதவி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

அதேசமயம் கோவை மக்களின் தேர்வு யார் என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரியவரும்.