கோவை இராமநாதபுரம் பகுதியில் சிக்னல் அருகே ஹோலி டிரினிட்டி கதீட்ரல் என்ற தேவலாயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவலாயத்தின் உள்ளே டிரினிட்டி பள்ளி செயல்பட்டு வருகிறது. தேவலாயத்தின் நுழைவாயில் அருகே புனித செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ம் தேதியன்று கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. இதனிடையே அன்றிரவு பத்து மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர். அப்போது ஒருவர் தேவாலயத்தின் நுழைவாயில் கதவின் மீது ஏறி தேவலாயத்திற்குள் உள்ளே நுழைந்து, அங்கிருந்த செபஸ்தியார் சிலையை கட்டையால் சேதப்படுத்தியுள்ளார். சிலையை சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வந்த தேவாலய காவலாளி ஜான்சன் என்பவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்நபர் நுழைவாயில் கதவை தாண்டி குதித்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து காவலாளி ஜான்சன் தேவாலய நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.




இதையடுத்து பாஸ்டின் ஜோசப் என்ற உதவி மத போதகர், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிலையை சேதப்படுத்திய நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். இதனிடையே சிலையை சேதப்படுத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி கிறிஸ்துவ அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.




இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் முக கவசம் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் வருவதும், அதனை ஆலய வளாகத்தின் அருகே நிறுத்தி விட்டு சிலையை சேதப்படுத்திய பின்னர் தப்பிச் செல்வதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் மற்றும் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன் குமார் (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவர் உட்பட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும், அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிலையை உடைத்ததும் தெரியவந்தது.




மேலும் பள்ளி மாணவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்த தீபக் என்பவர் சிலையை உடைத்ததும், மற்ற 3 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி மாணவர் மற்றும் மதன்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், லாரி ஓட்டுநர் மதன் குமார் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தீபக், மருதாசல மூர்த்தி ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.