திருப்பூர் மாவட்டத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை கடந்த 4 நாட்களாக பிடிபடாமல் சுற்றி வந்தது. இதனிடையே அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த வரதராஜன் மற்றும் விவசாய கூலித் தொழிலாளியான மாறன் (66) ஆகியோரை சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிறுத்தை தாக்கியது. சோளக்காட்டுக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை, வரதராஜனை தாக்கியது. இதில் அவரின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாறன் சத்தம் போட்டார். உடனே சிறுத்தை மாறனை தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கியது. இதில் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.




இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதில் சிலர் சிறுத்தையை தேடி சோளக்காட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த சிறுத்தை மேலும் இருவரை தாக்கியதில் காயமடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கவச உடை அணிந்தபடி சோளக் காட்டிற்குள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் ஒருவர் காயமடைந்தார். சிறுத்தை தாக்குதலில் அடுத்தடுத்து 5 பேர் காயமடைந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.




சிறுத்தை பதுங்கியிருந்த கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளததால், அங்கிருந்து வழிதவறி இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை அப்பகுதியில் இருந்து தப்பி வேறு பகுதிக்கு சென்றது. இதனால் மாலை மற்றும் இரவு அதிகாலை நேரங்களில் பொது மக்கள் தனியே நடமாட வேண்டாம் எனவும், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். கடந்த 4 நாட்களாக சிறுத்தை பிடிபடாமல் வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தது.



இந்நிலையில் அம்மாபாளையம் பகுதியில் சிறுத்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வனத்துறையினரை சிறுத்தை தாக்கியது. இதனால் சிறுத்தை தாக்குதலில் காயமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்நிலையில் முட் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து புவனத்துறையினர் வலைவீசி சிறுத்தையை பிடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சிறுத்தையை, ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் கோவை குனியமுத்தூர் பகுதியில் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, டாப் சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.