கோவையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு மலையாள மொழி பேசும் பா.ஜ.கவினர் இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் நடனமாடி மகிழ்ந்தார்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை முக்கியமான திருவிழாவாக இருந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையை ஒட்டி புதிய துணி உடுத்தி, வீட்டில் மலர் கோலம் இட்டு, விதவிதமான கூட்டு பொரியல், அவியல், குழம்பு வகைகள் கொண்டு விருந்து வைப்பது வழக்கம். அதற்கு பெயர் சத்யா என்று மலையாளத்தில் கூறுவார்கள். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் கடைசி நாளான திருவோணம் முக்கியமான நாளாகிறது.
ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். இதற்காக அவரை வரவேற்கும் வகையில் மொத்தம் 10 நாட்கள் இந்த பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றனர். மக்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பது வழக்கம். இந்த சிறப்பான ஓணம் திருநாளில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் ஓணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் அதிகளவிலான மலையாளிகள் வசித்து வருகின்றனர். கோவையில் உள்ள மலையாளிகள் திருவோணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய உடையணிந்தும், வீடுகளில் மலர் கோலம் இட்டும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராம் நகர் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் நிர்வாகிகளின் இல்லத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களின் பராம்பரிய உடையணிந்து வந்த வானதி சீனிவாசன், குத்து விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டு, வீட்டில் செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை சாப்பிட்டார். பின்னர் மலையாள மொழி பேசும் பெண்களுடன் இணைந்து வானதி சீனிவாசன் சிறிது நேரம் நடனம் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை மலையாளிகளுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்